பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படுகிறது.. சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் விஜய்!
Parandur Airport Project Dropped | பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து தொடர் எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பது கைவிடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறனை கொண்டுள்ளது. வளர்ந்து வரும் சென்னை மாநகரின் தேவையை கருத்தில் கொண்டு, பயணிகள் வசதி மற்றும் தொழில் தேவையை கருத்தில் கொண்டு சரக்கு விமான சேவையை ஊக்குவிக்கும் புதிய விமானம் தேவை என்ற நிலை உள்ளது. ஆனால், முந்தைய அரசு விவசாயிகளை பாதிக்கும் வகையில் குடியிருப்புகளை அதிகம் அகற்றும் வகையில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டது. ஏகனாபுரம் மற்றும் இதர கிராம் மக்கள் நடத்திய போராட்டங்களை நான் நேரில் சென்று பார்த்தேன். அவர்களுக்கு துணை நின்றேன். எனவே விவசாயிகளை பாதிக்காத குடியிருப்புகள் அகற்றாத வகையில் விமான நிலையம் அமைய வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து, பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.
