“10 MLAக்கள் ராஜினாமா செய்ய போறாங்களா?”.. தமிழக அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் டிடிவி தினகரன் பரபரப்பு புகார்!!
TTV Dhinakaran Meets TN Governor: 10 எம்.எல்.ஏ-க்கள் ஆளுங்கட்சிக்கு வரப்போவதாகக் கூறப்படுவதன் பின்னணியில் குதிரை பேரம் நடப்பதாகக் கூறி அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். பதவி ஆசை, பணத்தாசையால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக எம்.எல்.ஏ-க்கள் செயல்படுவதைத் தடுக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 26: தமிழக அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கவர்வதற்காக ஆளுங்கட்சியால் தொடர்ச்சியாகக் குதிரை பேரம் நடத்தப்பட்டு வருவதாகவும், வாக்களித்த தொகுதி மக்களுக்கு எதிராகவும் ஜனநாயக சீரழிவு ஏற்படுத்தும் விதமாகவும் நடைபெற்று வரும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் நேரில் சந்தித்துப் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றம்.. சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!
கட்சி மாறும் MLAக்களுக்கு முடிவு கட்ட வேண்டும்:
மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து, தவெக அரசு மீதான குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மீது பத்தாவது அட்டவணையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுவின் மீது மாண்புமிகு தமிழக சட்டப்பேரவைத்… pic.twitter.com/uKXemtDZ3o
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 25, 2026
செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் பேசுகையில், சட்டமன்றத்தில் அமைச்சர் ஒருவர் பேசும்போது, “10 எம்.எல்.ஏ-க்கள் எங்களைத் தேடி வரப்போகிறார்கள்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க எந்த மாதிரியான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன, அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தருவதாகக் கூறி அழைக்கிறார்களா அல்லது பொருளாசை காட்டி வளைக்கிறார்களா என்று கேள்வி எழுப்பிய அவர், பதவி ஆசை மற்றும் பணத்தாசை காரணமாகப் பச்சோந்திகள் போல் கட்சி மாறும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குதிரை பேரத்தின் அடிப்படையில் கடிதம்:
மேலும் மே 8-ஆம் தேதி இரவு நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்தபோது அமமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவுக் கடிதத்தை வழங்கியதாக எழுந்த சர்ச்சை குறித்து ஆளுநரிடம் ஏற்கெனவே முறையிட்டதை நினைவுகூர்ந்தார். அந்த ஆதரவுக் கடிதம் போலியானது அல்லது குதிரை பேரத்தின் அடிப்படையில் பெறப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வே கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கடந்த மூன்று மாதங்களாகக் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் – அமைச்சர் கீர்த்தனா..
ஆளுநரை நேரில் சந்தித்தது இதற்கே:
தூய சக்தி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தி வருபவர்களின் முகமூடியைக் கிழித்து, அவர்களின் உண்மைச் சொரூபத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆளுநரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்துள்ளதாகத் தெரிவித்த டிடிவி தினகரன், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், தொகுதி மக்களின் தீர்ப்பை மதித்து அரசியல் தூய்மையைப் பேணவும் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தான் வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார்.