3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றம்.. சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!
3 Tamils Shot Dead in Karnataka Forest: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரி அப்பகுதி மக்கள் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள துவமையார்பாளையம் வனப்பகுதியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோணிசாமி, பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இருந்து தப்பி வந்த மகிமைதாசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி, மிக நெருங்கிய தொலைவில் வைத்து இவர்கள் சுடப்பட்டிருப்பது உறுதியானதால் போலி என்கவுண்டர் குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிக்க : “நீர் திறந்து விட முடியாது!”.. ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தும் பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகா.. காவிரி விவகாரத்தில் பின்னடைவு!!
கசிந்த பிரேத பரிசோதனை அறிக்கை:
வனத்துறையினர் தூரத்திலிருந்து சுட்டதாகக் கூறிவந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை அந்த வாதத்தைப் பொய்யாக்கியுள்ளது. கொல்லப்பட்ட 3 தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான மிக நெருங்கிய தொலைவில் வைத்து சுடப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், ஒரே ஒரு அரசுத் துப்பாக்கியில் இருந்து மட்டுமே குண்டுகள் பாய்ந்திருப்பதும், இருதரப்பு துப்பாக்கிச் சூடு என்ற வனத்துறையின் கூற்றைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்றபோது, தூங்கிக் கொண்டிருந்த தங்கள் மீது வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தப்பிப் பிழைத்த மகிமை தாஸ் என்ற நபர் வெளியிட்ட காணொளி வாக்குமூலமும் இந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடக அரசு:
போலீசாரின் விசாரணையில் நியாயம் கிடைக்காது என்றும், வனத்துறையினரே நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளதால் நடுநிலையான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில்தான், இந்தத் துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு கர்நாடக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு வழக்கு மட்டுமன்றி, இச்சம்பவத்தைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் உட்பட மொத்தம் 4 வழக்குகளும் சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன.
சிபிஐ விசாரணை கோரும் தமிழகம்:
இச்சம்பவம் தமிழ்நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகச் சட்டமன்றத்தில் இப் பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதோடு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உட்படப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடக மாநில பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த வழக்கைக் கர்நாடக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதையும் படிக்க: 3 தமிழர்கள் மீதும் அருகிலிருந்து துப்பாக்கிசூடு – பிரதே பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்
நாளை முழு அடைப்பு போராட்டம்:
சிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டிருந்தாலும், இச்சம்பவத்தில் இன்னும் பல்வேறு மர்மங்கள் நீடிப்பதாகப் பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் வழக்கைச் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹனூர் தாலுகா முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்களும் உள்ளூர் கிராம மக்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.