AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நீர் திறந்து விட முடியாது!”.. ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தும் பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகா.. காவிரி விவகாரத்தில் பின்னடைவு!!

Cauvery Water Dispute: தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மழை பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா பிடிவாதம் காட்டி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இது குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நீர் திறந்து விட முடியாது!”.. ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தும் பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகா.. காவிரி விவகாரத்தில் பின்னடைவு!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Aug 2026 08:19 AM IST

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை அளித்த போதிலும், போதிய மழை இல்லை எனக் கூறித் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு மீண்டும் பிடிவாதம் காட்டி வருகிறது. டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் இப்பரிந்துரையை ஆணையம் ஏற்று உத்தர பிறப்பிக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க: “பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது!”.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

15 நாட்களுக்குத் திறந்து விட கோரிக்கை:

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 141-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசின் காவிரி தொழில்நுட்பக் குழு அதிகாரிகள், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடகா முறையாகச் செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டினர். அதாவது, வினாடிக்கு 12,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டிருந்தும், கர்நாடக அரசு ஒருசில நாட்கள் மட்டுமே அவ்வாறு தண்ணீரைத் திறந்து விட்டுவிட்டு பின்னர் நிறுத்திவிட்டதாகத் தமிழ்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 1.9 டி.எம்.சி (TMC) நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் திறந்து விடக் கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தரப்பில் பலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

9000 கன அடி தண்ணீர் திறந்து விட பரிந்துரை:

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்த கர்நாடக அரசு அதிகாரிகள், தங்கள் மாநிலத்தில் போதிய மழை பெய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி தமிழ்நாட்டிற்கு இவ்வளவு தண்ணீர் திறந்து விட முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அதிக அளவிலான தண்ணீரைத் திறந்து விட்டால், கர்நாடகாவில் உள்ள விவசாயத் தேவைகளுக்கும் குடிநீர் விநியோகத்திற்கும் கடுமையான நீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் வாதாடினர். இரு மாநில அதிகாரிகளின் வாதங்களைக் கேட்டறிந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா, கூட்டத்தின் முடிவில் கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 9,000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குப் பரிந்துரை செய்தார்.

இதையும் படிக்க: ‘வெற்றி பயணம்’.. மாவட்டங்களுக்கு இடையே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

குழு பரிந்துரையைக் கூட வழங்க மறுப்பு:

ஒழுங்காற்றுக் குழுவின் இந்த பரிந்துரையின் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி வினாடிக்கு 9,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்குச் சுமார் 11.66 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைக்கும். அதேவேளையில், தமிழ்நாட்டின் கோரிக்கையான நாள் ஒன்றுக்கு 1.9 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தால் சுமார் 28 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒழுங்காற்றுக் குழுவின் குறைந்த அளவிலான பரிந்துரையைக் கூட வழங்க கர்நாடகா மறுத்து வருவது தமிழக விவசாயிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us