தென்காசியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.. வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்..
காட்டு யானைகளின் நடமாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்பகுதி வழியாக உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்வதால், யானைகள் அவற்றில் மோதி பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 25, 2026: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை, அச்சன்புதூர், நெடுவயல் மற்றும் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடையநல்லூர் அருகே கிராமத்துக்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் இரண்டு யானைகளும் இறங்கி குளித்தபடி விளையாடிக் கொண்டிருந்தன.
ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்:
அப்போது அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யானைகளை பார்த்து அச்சமடைந்து, அங்கிருந்து அலறியபடி ஓட்டம் பிடித்தனர். மேலும், இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் – அமைச்சர் கீர்த்தனா..
பொதுமக்கள் நடமாட்டத்தை அறிந்த யானைகள், குளத்தில் இருந்து வெளியேறி அருகில் இருந்த தென்னந்தோப்புக்குள் புகுந்தன. தகவலறிந்த கடையநல்லூர் வனத்துறையினர் மற்றும் அச்சன்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகள் நடமாடும் பகுதிக்குள் பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
யானைகளின் நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு, யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்:
மேலும், காட்டு யானைகளின் நடமாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்பகுதி வழியாக உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்வதால், யானைகள் அவற்றில் மோதி பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுக வெளிப்படையாக செயல்படவில்லை – பெ. சண்முகம்..
இரவு நேரங்களில் யானைகளை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டு யானைகள் திடீரென குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சம்பவத்தால், வடகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பரபரப்பும் நிலவி வருகிறது.