முந்திரி காட்டில் நள்ளிரவில் கேட்ட துப்பாக்கிச் சத்தம்.. தப்பியோட முயன்ற பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி!!
Cuddalore Rowdy Encounter: கடலூர் நெய்வேலி அருகே புலவன்குப்பம் முந்திரி காட்டில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி கோபியைப் பிடிக்கச் சென்றபோது, அவர் அரிவாளால் தாக்கியதில் காவலர்கள் பாண்டியராஜன், விஜயலசோழன் காயமடைந்தனர். தற்காப்பிற்காகக் காவல் ஆய்வாளர் செந்தில் சுட்டதில் கோபியின் காலில் 2 குண்டுகள் பாய்ந்தன. தாக்குதலில் காயமடைந்த காவலர்களும் ரவுடியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடலூர், ஆகஸ்ட் 26: கடலூர் மாவட்டத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி கோபி என்பவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்த போது, அவர் தப்பியோட முயன்றதால் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.
இதையும் படிக்க: விளையாட்டு வினையானது.. தொண்டையில் பலூன் சிக்கி 6 வயது சிறுவன் பரிதாப பலி.. திருப்பத்தூரில் சோகம்!!
நீண்ட நாட்களாக தொடர்ந்த மோதல்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் ரவுடி கோபி தலைமையிலான ஒரு குழுவிற்கும், ஆனந்தராஜ் தலைமையிலான மற்றொரு குழுவிற்கும் இடையே “யார் பெரியவர்?” என்ற ‘கேங் வார்’ மோதல் நீண்டநாட்களாக நடந்து வந்துள்ளது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த 16-ஆம் தேதி நெய்வேலியில் மது அருந்திக் கொண்டிருந்த ஆனந்தராஜ் குழுவினர் மீது கோபியின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் நரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மேலும் ஆனந்தராஜ் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் தீவிர தேடுதல் வேட்டை:
இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவர் பிரபல ரவுடி கோபி. சம்பவத்திற்குப் பின் தலைமறைவான கோபியைப் பிடிக்கக் கடலூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடலூர் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் ரவுடி கோபி பதுங்கியிருப்பதாகக் காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
சுற்றி வளைத்த போலீசார்:
கோபி பதுங்கியிருந்த பகுதியைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது, காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க ரவுடி கோபி திடீரெனத் தான் வைத்திருந்த அரிவாளால் போலிசாரைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இத்தாக்குதலில் நெய்வேலி காவல் நிலையக் காவலர்களான பாண்டியராஜன் மற்றும் விஜயலசோழன் ஆகிய இருவருக்கும் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. தன் சக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்ட நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில், தற்காப்பிற்காகவும் ரவுடியைப் பிடிக்கவும் தனது துப்பாக்கியால் உடனடியாகச் சுட்டார். இதில் ரவுடி கோபியின் இடது காலில் இரண்டு குண்டுகள் பாய்ந்து அவர் சுருண்டு விழுந்தார்.
இதையும் படிக்க: “பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து பேரவையில் காரசார விவாதம்”.. ‘ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை’ vs ‘லாட்டரி மருமகன்’ வார்த்தை மோதலால் பரபரப்பு!
ரவுடி மருத்துவமனையில் அனுமதி:
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி கோபி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், ரவுடியின் தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் பாண்டியராஜன் மற்றும் விஜயலசோழன் இருவரும் என்.எல்.சி (NLC) பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுட்டுப் பிடிக்கப்பட்ட கோபி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.