இலவச லட்டுவில் ரூ.3.40 கோடி ஸ்வாகா.. ராமநாதபுரம் கோயிலில் அம்பலமான மெகா மோசடி.. 6 ஊழியர்கள் சஸ்பெண்ட்!
Ramanathapuram Temple Laddu Distribution Defrauding: ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச லட்டு விநியோகத்தில் ரூ.3.40 கோடி வரை மோசடி நிகழ்ந்ததாக புகார் எழுந்த நிலையில், கோயிலில் பணிபுரிந்த 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரபலமான ராமநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கோவில் இணை ஆணையர் செல்லதுரை தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், ராமேஸ்வரம் கோவிலில் தமிழக அரசு உத்தரவுபடி நாள்தோறும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் லட்டு பிரசாத விநியோகத்தில் மோசடி நடந்திருப்பது உறதி செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு தினந்தோறும் இலவச லட்டு பிரசாதம்
மேலும், கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 ஆண்டுகளில் மட்டும் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.3 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் வரை மோசடி நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் பக்தர்களுக்கு சுமார் 30 கிராம் அளவில் 1,520 லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 50 கிராமில் ஒரு லட்டு ரூ.15 வீதம் கோயில் வளாகத்தில் உள்ள கவுண்டரில் பக்தர்களுக்காக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பதற்காக இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க: சி.வி.சண்முகம் தரப்பு மீது இபிஎஸ் டீம் மூவ்! தவெக ஆதரவு விவகாரத்தில் ஆளுநரிடம் புகார் அளிப்பு!




இலவச லட்டு விநியோகத்தில் மோசடி நிகழ்ந்தது எப்படி
விற்பனை செய்யப்படும் லட்டுகளின் எண்ணிக்கையில் பாதிக்கு அவர் சொந்த கணக்கில் மூலப்பொருட்களை வாங்கி தந்ததுடன், தட்டுகளை தயாரித்து விற்றதில் பாதி வருவாயை தனது சொந்த கணக்கில் எடுத்துக் கொண்டு பல கோடி மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. மேலும், கடந்த மார்ச் 14- ஆம் தேதி லட்டு தயாரிப்பு கூடத்தில் மேற்கொண்ட ஆய்வில் மூலப்பொருளின் இருப்பு குறைவாக இருந்தது. கடந்த 2023 முதல் 2026 பிப்ரவரி வரை லட்டு விற்பனையை குறைவாக கணக்கு காட்டியதுடன், ஆய்வுக்குப் பின் கூடுதலாக லட்டு விற்பனையாகி உள்ளதாக கணக்கு காண்பித்து இலவச லட்டு வழங்கியதில் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
கோயில் ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்
இந்த விவகாரம் தொடர்பாக, கோவில் பிரசாத பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், பிரசாத கடையில் பணிபுரிந்த சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாத பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு அம்பிகா ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் கோயில் பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி!