அக்டோபர் 10-ல் தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி.. ‘மாணவர்களின் குரல்’ நிகழ்வில் பங்கேற்க மாணிக்கம் தாகூர் எம்பி அழைப்பு!
Rahul Gandhi to Visit Chennai: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' என்ற கலந்துரையாடல் நிகழ்விற்காக அக்டோபர் 10-ஆம் தேதி சென்னை வருகிறார் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்விக் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட 8 முக்கியப் பிரச்சினைகள் பற்றி இதில் பேசப்படவுள்ளது.
சென்னை, செப்.24: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறியும் நோக்கில் ‘மாணவர்களின் குரல்’ எனும் கலந்துரையாடல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஆறாவது நிகழ்வாகத் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு ராகுல் காந்தி அக்டோபர் 10-ஆம் தேதி வருகை தரவுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிக்க: “ஆர்ப்பாட்டத்துடன் கலைந்து செல்பவர்கள் அல்ல விசிக!”.. மக்கள் பிரச்சனைகளுக்காக முதல்வரை சந்தித்து மனு அளிப்போம்.. திருமாவளவன்
அரசியல் சார்பற்ற திறந்தவெளி மேடை:
இந்தச் சந்திப்பு குறித்து விரிவாக விளக்கிய மாணிக்கம் தாகூர் எம்பி, இது வெறும் வழக்கமான அரசியல் பொதுக்கூட்டம் கிடையாது என்று சுட்டிக்காட்டினார். போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் உயர்கல்வி பயில்வோர் சந்திக்கும் அன்றாடப் போராட்டங்கள், வேலைவாய்ப்பின்மை, கல்வி அமைப்பில் மலிந்துள்ள முறைகேடுகள் ஆகியவை குறித்து ராகுல் காந்தியுடன் நேரடியாக விவாதிக்கும் திறந்தவெளி மேடையாக இது அமையும். முன்னதாக, நாட்டின் முக்கியக் கல்வி மையமாகக் கருதப்படும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவில் இந்த பயணம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், மகாராஷ்டிராவின் புனே மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆறாவது நிகழ்வு சென்னையில் நடைபெறவுள்ளது.
மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்:
முந்தைய ஐந்து கலந்துரையாடல் நிகழ்வுகளிலும் ராகுல் காந்தி மாணவர்கள் சந்திக்கும் 8 முக்கியமான பிரச்சினைகளை விரிவாக முன்வைத்து விவாதித்துள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். குறிப்பாக, நாடு தழுவிய அளவில் தொடர்ச்சியாக நடைபெறும் வினாத்தாள் கசிவு, மத்திய அரசு உருவாக்கி வைத்துள்ள வேலைவாய்ப்பற்ற பொருளாதாரம், பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக் கட்டணங்கள் என்ற பெயரில் நடைபெறும் பகற்கொள்ளை, தேர்வு முறைகளில் காணப்படும் கடுமையான தேக்கம் மற்றும் வாய்ப்பு மறுப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மேலும், பொதுக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் மத்திய அரசு குறைத்து வருவது, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்புப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள், மாணவிகள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு மற்றும் சமூகத் தடைகள், கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மூலம் முறைகேடாக ஆக்கிரமிப்பது மற்றும் கேள்விகேட்கும் ஜனநாயக உரிமையை நசுக்குவது போன்ற விவகாரங்கள் இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!
7.5 கோடி மாணவர்களைப் பாதித்த வினாத்தாள் கசிவு:
கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 முக்கிய அரசுப் பணி மற்றும் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகவும், இதனால் சுமார் 7.5 கோடி மாணவர்களின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்களை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. சராசரியாக மாதத்திற்கு ஒரு வினாத்தாள் கசியும் சூழல் நிலவியபோதிலும், தவறு செய்தவர்கள் மீதோ அல்லது பொறுப்பான அதிகாரிகள் மீதோ தண்டனை அளிக்கப்படும் விகிதம் பூஜ்ஜியமாகவே உள்ளது என்பது கவலைக்குரிய விஷயமாகும். சென்னையில் நடைபெறவுள்ள இந்த ‘மாணவர்களின் குரல்’ கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளையும், நீட் தேர்வு உள்ளிட்ட கல்விச் சிக்கல்களையும் ராகுல் காந்தியிடம் நேரடியாக முன்வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.