AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் அதிரடி ஆய்வு!”.. மாநகராட்சி ஆணையருடன் ஆலோசித்ததால் புதுக்கோட்டையில் சர்ச்சை!

Pudukkottai Govt camp inspection controversy: புதுக்கோட்டை அரசு முகாம் அமைச்சரின் சகோதரர் ஆய்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேசின் சகோதரர் அரசு முகாமில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன. இச்சம்பவம் குறித்து அமைச்சர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

“அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் அதிரடி ஆய்வு!”.. மாநகராட்சி ஆணையருடன் ஆலோசித்ததால் புதுக்கோட்டையில் சர்ச்சை!
அமைச்சர் பர்வேஸின் சகோதரர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Jul 2026 11:32 AM IST

புதுக்கோட்டை, ஜூலை 25: புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட முகாமில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேசின் சகோதரர் முகமது இப்ராஹிம் நேரில் சென்று அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்திய வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த முகாமிற்குப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வருகை தந்து ஆய்வு செய்துவிட்டுப் புறப்பட்டார்.

இதையும் படிக்க: “நான் அமைச்சர்தான்.. ஆனா எனக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கான்!”.. திரையரங்கில் அழுத விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் நெகிழ்ச்சி விளக்கம்!

அமைச்சரின் சகோதரர் வருகை:

ஆட்சியர் சென்ற பிறகு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேசின் சகோதரரும் கட்சி நிர்வாகியுமான முகமது இப்ராஹிம், கட்சி நிர்வாகிகளுடன் அந்த முகாமுக்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் காந்தியராஜ், அமைச்சரின் சகோதரருக்கு முகாம் குறித்து விளக்கமளித்தார்.

ஆவணங்களைப் பார்வையிட்ட முகமது இப்ராஹிம், அதிகாரிகளுக்குச் சில ஆலோசனைகளையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆய்வு முடிந்து புறப்பட்ட அமைச்சரின் சகோதரரை, மாநகராட்சி ஆணையர் மண்டபத்தின் வாசல் வரை சென்று வழிஅனுப்பி வைத்தார்.

கட்சித் தலைமையின் உத்தரவை மீறிய செயல்?

ஏற்கனவே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அரசு முகாம்கள் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் எடுப்பது மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, “அரசு நிகழ்ச்சிகளிலோ அல்லது அரசு முகாம்களிலோ கட்சி நிர்வாகிகள் யாரும் தலையிடவோ, பங்கேற்கவோ கூடாது” என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது.

கட்சித் தலைமையின் இந்த அறிவிப்பையும் மீறி, அமைச்சரின் சகோதரரே அரசு சார்பாக நடைபெற்ற முகாமுக்குச் சென்று ஆய்வு நடத்தியதும், மாநகராட்சி ஆணையர் அதற்கு அனுமதி அளித்ததும் சமூக வலைதளங்களில் பலத்த விவாதப் பொருளாக மாறியுள்ளது.

யார் இந்த முகமது இப்ராஹிம்?

முகமது இப்ராஹிம் ஏற்கனவே அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டவர் ஆவார். முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், அதிமுகவின் மாவட்ட மாணவரணிச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தார்.

மேலும் படிக்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?

இவரது சகோதரர் முகமது பர்வேஸ், தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான பின்னரே, முகமது இப்ராஹிமும் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து அமைச்சர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Follow Us