இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
Indian Communist leader Nallakannu: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில், மறைந்த நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில்: மறக்க முடியாத மாமனிதர் நல்ல கண்ணுவின் வாழ்வே நமக்காக அவர் விட்டு சென்ற மகத்தான செய்தியாகும். இதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கட்டும். பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பகட்டில்லாத தோழர் நல்லகண்ணு. அவர்களின் நினைவும், புகழும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடமை போராளி நல்லக்கண்ணு மறைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
நல்லகண்ணு மறைவு பெரும் இழப்பாகும்
பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமை, தொண்டு ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு மட்டுமின்றி, எளிமையின் சிகரமாக விளங்கிய நல்லகண்ணு மறைவு பெரும் இழப்பாகும். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம். பி. வெளியிட்ட பதிவில், போராட்டங்களும், தியாகங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு உரிமையாளரான நல்ல கண்ணுவின் புகழ் தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும். தகைசால் தமிழர் நல்ல கண்ணுவுக்கு செவ்வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் மறைவு




இறுதி மூச்சு வரை சமரசமின்றி இருந்தவர் நல்லகண்ணு
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தனது இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர் மூத்த தலைவர் நல்ல கண்ணு. தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு நல்ல கண்ணுவின் இறப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள் மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் என அனைவரது உரிமைக்காக அயராது போராடியவர் நல்ல கண்ணு என்று தெரிவித்துள்ளார்.
மாபெரும் தலைவர் நல்லகண்ணுவை தமிழகம் இழந்திருக்கிறது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஒரு மாபெரும் தலைவர், மகத்தான தலைவரை தமிழகம் இழந்திருக்கிறது. அடக்குமுறை அனைத்தையும் கடந்து தற்போதைய தலைமுறையையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் நல்ல கண்ணு. யாராலும் குறை சொல்ல முடியாத நபர் நல்லகண்ணு. கடந்த 100 ஆண்டு கால வரலாறு, ஒரு தலைவனுக்கு எளிமை, நேர்மை, தூய்மைக்கு சான்றாக விளங்கியவர் நல்ல கண்ணு. அரசு இவருக்கு மரியாதை கேட்டு தரக் கூடாது. அவர்களே தருவார்கள் என நம்புகிறேன். விளையாட்டு வீரருக்கு கொடுக்கும் விருது ஐயாவுக்கு கிடைக்கவில்லை என்றால் விருதுக்கான மரியாதை இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சுதந்திர போராட்டம் முதல் கடைசி காலம் வரை.. நல்லகண்ணு கடந்து வந்த பாதை!