AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கம்.. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் – மு.க ஸ்டாலின்..

MK Stalin: ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இனியும் ஞானேஷ் குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கம்.. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் – மு.க ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Sep 2026 19:11 PM IST

செப்டம்பர் 23, 2026: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கம்:

சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களமாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இன்று அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, SIR-க்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் வேகமாக வந்த லாரி.. அப்பளமாக நொறுங்கிய பைக்.. 2 ஆசிரியைகள் உள்பட மூவர் பரிதாப பலி!

தன்னந்தனியாக செயல்பட்ட ஞானேஷ் குமார்:


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாகவும், இரகசியமாகவும் செயல்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் ஆணையத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து 10 மாதங்களில் 14 முறை இருவரும் ஆட்சேபனை தெரிவித்தும், அவை புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுவது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்:

தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அது சாத்தியமாகாத நிலையில் பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணைய விதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், மூவரில் இருவருக்குத் தாங்கள் பொறுப்பு வகிக்கும் அமைப்பில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்திருந்தால், இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: நெருங்கும் தீபாவளி.. பட்டாசு கடைகள் அமைப்பதற்கு விண்ணப்பிப்பது எப்படி? அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

“இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையோடும், அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப்பெரும் களங்கம் படிந்துள்ளது” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், “நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது என்பது குறித்துகூட எங்களுக்குத் தெரியவில்லை.

தேர்தல் ஆணையத்தில் அரசியல் குறுகீடுகள்:

சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள ERO எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை. அதைச் செய்வதற்கான ERONet வலைத்தளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது” என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்:

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இனியும் ஞானேஷ் குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் வலியுறுத்துவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us