“டி.கே. சிவகுமாருக்கும் திமுக குடும்பத்திற்கும் நீண்ட கால நெருங்கிய உறவு!”.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமாக மனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், அவசர அவசரமாக திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து குழப்பத்தை விளைவிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் சென்னை விமான நிலையத்தில் குற்றம் சாட்டினார்.
சென்னை, ஆகஸ்ட் 02: காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் திமுகவும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இத்தகவல்களை விரிவாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: காவிரி மேகதாது விவகாரத்தில் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்?.. விஜய பிரபாகரன் சரமாரி கேள்வி!!
ஸ்டாலின் குடும்பம் சொல்வதையே சிவகுமார் கேட்பார்:
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் திமுக குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகக் கட்சியையும் தாண்டி ஆழமான தனிப்பட்ட உறவு இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
“கர்நாடகாவில் இருக்கும் டி.கே. சிவகுமார், தனது சொந்தக் கட்சியான அகில இந்திய காங்கிரஸ் தலைமை கூறுவதைக் கேட்பதைக் காட்டிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் சொல்வதையே அதிகம் கேட்கும் நிலையில் இருக்கிறார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே அவர் பல வழிகளில் செயல்படுகிறார். தமிழகத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நற்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இருவரும் இணைந்து தமிழகத்திற்கு எதிராக முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றனர்” என்று சாடினார்.
அவசரமாக உச்ச நீதிமன்ற மனு தாக்கல்:
தமிழக அரசின் சட்டப்போராட்டம் குறித்துப் பேசிய நிர்மல் குமார், “முதலமைச்சர் ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் உமாபதி உள்ளிட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசித்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான அனைத்துப் பணிகளையும் முடித்துச் செயல்முறையில் வைத்திருந்தார். இதனை அறிந்த திமுக, அவசர அவசரமாக அன்றைய தினம் மாலையே தானாக ஒரு பெட்டிஷனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஒரே மாநிலத்தின் சார்பில் முரண்பாடான பெட்டிஷன்களைத் தாக்கல் செய்வது நீதிமன்றத்தில் பெரும் குழப்பத்தை விளைவித்து, தமிழகத்தின் உரிமைகளைப் பின்னோக்கித் தள்ளும் செயலாகும்” என்று சுட்டிக்காட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்படிக் காவிரி விவகாரத்தில் முட்டுக்கட்டைகள் போட்டாரோ, அதேபோல் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு நற்பெயர் கிடைக்கக் கூடாது என்பதற்காக ‘தமிழக முதல்வர் தனிமைப்பட்டு நிற்கிறார்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி திமுக அரசியல் செய்கிறது என்றார்.
தமிழகத்தின் உண்மையான நதிநீர் உரிமை:
கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறித்துத் தெளிவுபடுத்திய அமைச்சர், “மழை பொழிவு காரணமாகக் கபினி அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால், நமக்குத் தேவையான 17 டி.எம்.சி பாக்கி நீரையும், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபடி தினமும் வர வேண்டிய 3,500 கன அடி நீரையும் கர்நாடகா முறையாகத் திறக்கவில்லை. மழை நீரை உபரியாகத் திறந்துவிட்டுத் தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. தமிழகத்தின் நிலையான உரிமைகளை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றத்தில் வலுவான வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது” என்று கூறினார்.
இதையும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
அனைத்துக் கட்சி கூட்டம்:
அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், “சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் மறுநாளே அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அம்மாநில நலனுக்காக ஒரே நிலைப்பாட்டில் நிற்கின்றன. ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக ஆளுக்கொரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன” எனக் குற்றம் சாட்டினார்.