அமோனியா வாயு விபத்தில் 2 பேர் பலி: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
திருவள்ளூர் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் விபத்தில் இதுவரை 7 மரணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அமைச்சர் அருண் ராஜ் 2 பேர் தான் மரணமடைந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும் மீதமுள்ளவர்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
திருவள்ளூர், ஜூன் 21 : திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகைபேர் எனும் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஜூன் 21, 2026 இன்று காலை திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த ஆலையில் பணியாற்றிய 60க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 7 பேர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். மேலும் இறந்தவர்களின் உடலை அவர்களது சொந்த மாநிலத்தில் நல்லடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் பேராபத்து மிக்க தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் – கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவு




அமோனியா வாயு விபத்தில் 2 பேர் பலி
இதற்கிடையில் விபத்தில் சிக்கி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை மருத்துவ நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்த விபத்தில் 7 பேர் இறந்துள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தனியார் இறால் பண்ணையில் ஏற்பட்ட அமோனியா விஷ வாயு கசிவால் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. வேல்ஸ் மருத்துவமனையில் 28 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : தேர்தல் தோல்வி.. நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!!
தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் ிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். மருத்துவமனை டீன்கள் நிலையை தொடர்ந்து அப்டேட் செய்துவருகின்றனர். இதுகுறித்து முதல்வர் விஜய்யும் கேட்டறிந்து வருகிறார். இந்த விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை. 2 பேர் மட்டுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சில கவலைக்கிடமாக இருந்துவருகின்றனர். அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்றார். இந்த விபத்தில் இதுவரை 7 மரணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அமைச்சர் அருண் ராஜ் 2 பேர் தான் மரணமடைந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.