நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – திமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு
நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் வருகிற ஜூன் 23, 2026 அன்று சென்னை சைதாபேட்டையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 21 : நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் வருகிற ஜூன் 23, 2026 அன்று சென்னை சைதாபேட்டையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வு ஜூன் 21, 2026 இன்று நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 4 மாணவர்கள் விபரீத முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் அக்கட்சியின் மாணவரணி சார்பில் ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு
இது குறித்து திமுக மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாசிச பாஜக அரசால் இந்தியா முழுவதும் திணிக்கப்பட்ட நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் மோசடிகள் முறைகேடுகள் அம்பலப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில், நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதையும் படிக்க : அரசுப் பள்ளியில் புகுந்து இடையூறு.. ‘ரீல்ஸ்’ போட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!




இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிகின்றனர். இது பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்படும் பச்சைப் படுகொலையாகும். இத்தகைய நுழைவுத் தேர்வுகளையும் தகுதித் தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி பாசிச மோடி அரசினை திமுக தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது.
அதேபோல் ஒன்றிய பாஜக அரசு, மொழிவாரி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், தாய்மொழியைத் துறக்கச் செய்து, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை மக்களிடையே திணித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்தே, தமிழ்நாட்டில் வடமொழித் திணிப்பை கல்வி நிலையங்களில் பாடத்திட்டம் வழியாகவும் இதர பல்வேறு வகைகளிலும் செய்து வருகிறது.
இதையும் படிக்க : “அமைச்சராக பெருமை இல்லை.. தளபதியின் நண்பன் என்பதில் தான் பெருமை!”.. அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி!!
தற்போது ஒன்றிய அரசுப் பள்ளிகளில் (CBSE) 9-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியைக் கற்க வேண்டும் எனும் திட்டத்தைச் செயல்படுத்திட ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது. இதனைத் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்திருக்கிறார்.
எனவே, ஒன்றிய அரசின் இம்முயற்சிகளை தடுத்திட, ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி பாஜக அரசின் நீட்தேர்வு மற்றும் இந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டிக்கும் வகையிலும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் தலைநகராம் சென்னை மாநகர், சைதையில் “கலைஞர் பொன்விழா வளைவு” அருகில், ஜூன் 23 (செவ்வாய்கிழமை) அன்று காலை 09.00 மணியளவில், திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். உயிர்க்கொல்லி நீட்தேர்வினை ஒழித்திடுவோம். வடமொழி திணிப்பை தடுத்திடுவோம். அண்ணா தந்த இருமொழி கொள்கையை போற்றிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.