சித்திரை திருவிழா.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளுக்கு புதிய நடைமுறை!
Madurai Traffic Changes: மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி, மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்துவதற்காக 3 வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) முதல் நாளை செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 28) வரை 3 நாட்கள் மீனாட்சி அம்மன் திக்விஜயம், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் ஆகியவை நடைபெற உள்ளன. இதன் காரணமாக மதுரை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாநகர பகுதிகளில் இன்று ( திங்கள்கிழமை) மினி வேன் போன்ற சரக்கு வாகனங்கள் பகல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வந்து செல்லலாம். ஆனால், இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை 4 ஆவணி மூல வீதிகளில் எந்த விதமான சரக்கு வாகனங்களும் வந்து செல்வதற்கு அனுமதி கிடையாது. இதே போல, மாசி வீதிகள் மற்றும் கீழமாசி வீதிகளில் திக்விஜயம் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் இந்த பகுதிகளில் எந்த விதமான சரக்கு வாகனங்களும் வந்து செல்வதற்கு அனுமதி கிடையாது.
சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதியில்லை
இதே போல, மற்ற மாசி வீதிகளில் இன்று இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்வதற்கு அனுமதி உள்ளது. இது தவிர, 4 ஆவணி மூல வீதிகளில் இன்று இரவு 10 மணி முதல் புதன்கிழமை பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களின் எந்த ஒரு வாகனமும் நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது. மேலும், மதுரையின் மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி, கோவிலை சுற்றி உள்ள 4 மாசி வீதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் தேரோட்டம் முடியும் வரை இருசக்கர வாகனங்கள் உட்பட எந்த வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது.
மேலும் படிக்க: வெயிலின் தாக்கம்: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்




4 மார்ட் வீதியில் வாகன நிறுத்தும் இடம்
புதன்கிழமை பகல் முழுவதும் கீழமாசி வீதி, கீழ மார்ட் வீதிகளில் எந்த வாகனங்களும் வந்து செல்வதற்கு அனுமதி கிடையாது. மற்ற மாசி வீதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படும். தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களது வாகனங்களை 4 மார்ட் வீதிகளில் இடையூறு இன்றி நிறுத்திக் கொள்ளலாம். இன்று இரவு 11 மணி முதல் ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, வாகனங்கள் நிறுத்தவோ அனுமதி கிடையாது.
வாகன ஓட்டிகளுக்கு 3 வண்ணத்தில் அனுமதி அட்டை
மேலும், வாகனங்களை புதன்கிழமை காலை 6 மணி முதல் நிறுத்துவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மஞ்சள் நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மேல ஆவணி மூல வீதியிலும், இளம் சிவப்பு நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் தெற்கு ஆவணி மூல வீதியிலும் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!