பக்தர்கள் கவனத்துக்கு.. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
Chitra Pournami Girivalam Time: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி, பக்தர்கள் கிரிவலம் வருவதற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் வரும் பௌர்ணமி விழா, சித்ரா பெளர்ணமி, கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாகும். அதிலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாகும். அதன்படி, விசேஷ நாட்களில் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அத்துடன், கோவிலை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ள கிரிவலப் பாதையில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக கிரிவலம் வருவார்கள். இது அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சித்ரா பெளர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேகம்
இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற மே 1- ஆம்தேதி ( வெள்ளிக்கிழமை) சித்திரை மாத பௌர்ணமி வருகிறது. இந்த தினத்தன்று உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படவுள்ளது.அதன்படி, அன்றைய தினம் காலை முதல் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
மேலும் படிக்க: சனி வக்ர காலம் தொடங்குகிறது.. இந்த 4 ராசிகளுக்கும் கடினமான நேரம்!




திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
இந்த நிலையில், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி ( வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்
எனவே, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ குழு, தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அத்துடன், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: சித்ரா பௌர்ணமி 2026.. வீட்டிலேயே செய்ய வேண்டிய எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாடு!!