ஆடி அமாவாசை திருவிழா: பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்குப் போறீங்களா?
Sorimuthu Ayyanar Temple: பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தாமிரபரணி ஆறு மற்றும் வனச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற பாபநாசம் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதேவேளையில், நான்கு மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் வனச்சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாகனங்கள் அனுமதி மற்றும் பயணத் தேதிகள்
பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி வழிபடவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் சுழற்சி முறையில் வாகனக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, திருவிழாவிற்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பாபநாசம் சோதனைச் சாவடி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அரசுப் பேருந்துகள் உட்பட எந்தவொரு தனியார் வாகனத்திற்கும் அனுமதி வழங்கப்படாது.
தங்குதல் மற்றும் பேருந்து வசதிகள்
பக்தர்கள் தங்கள் பாரம்பரியச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 12 வரை கோவில் வளாகத்தில் தங்க அனுமதிக்கப்படுவர். இக்காலக்கட்டத்தில் அகஸ்தியர்பட்டி தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு அரசுப் பேருந்துகள் மூலமாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல முடியும். தனியார் வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி காலை குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் தங்களது உடைமைகளைத் திரும்ப எடுத்து வர பாஸ் பெறப்பட்ட தனியார் வாகனங்கள் பாபநாசம் பார்க்கிங் பகுதி வரை அனுமதிக்கப்படும்.
Also Read: ஆடிப்பெருக்கு: பெண்களே தாலி கயிறு மாற்ற உகந்த நேரம் எது?
வனத்துறை கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகள்
வனப்பகுதியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள், இரசாயன சோப்புகள், ஷாம்பூக்கள் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை வனத்தினுள் கொண்டு செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானங்கள் மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்களைக் கொண்டு வருவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்பதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். ஆபத்தான ஆழமான ஆற்றுப் பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வன எல்லைகளுக்குள் பக்தர்கள் செல்லக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.