AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரம்.. சார்-பதிவாளர் உள்ளிட்டோருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

Palani Land Fraud Case : பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கெனவே, ஜாமின் தரமறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரம்.. சார்-பதிவாளர் உள்ளிட்டோருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!
பழனி சார் பதிவாளர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 31 Aug 2026 20:30 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக பத்திர பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம், பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி, டி. கே .என். புதூர் பகுதியை சேர்ந்த சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், வெள்ளதுறை, சேதுபதி, சுப்ரமணியன், முருகதாஸ், ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சார்-பதிவாளர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுப்பு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவர்கள் ஏற்கனவே ஜாமீன் கோரி இருந்த நிலையில், அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து தற்போதும் ஜாமின் வழங்குவதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள இவர்கள், ஜாமினில் வெளி வந்தால் விசாரணை உள்ளிட்டவை பாதிக்கப்படும் என கருதி நீதிபதி ஜாமீன் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மதுரையில் எஃப்கியூஎல் முதலீட்டு மோசடி.. பாதிக்கப்பட்ட இளைஞர் விபரீத முடிவு.. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

பழனி கோயில் நில முறைகேடு பின்னணி

பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததாக ஜூலை மாதம் புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரி பழனி அடிவார காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர், வழக்கின் தீவிரம் கருதி இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக தற்காலிக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா மற்றும் பழனி நிரந்தர சார்பதிவாளர் பால சந்தர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கு விசாரணை

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பத்திரப்பதிவு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கனவே தனி நபருக்கு சொந்தமான நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்தததும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறாக பழனி கோவில் நில மோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 3-ஆவது குழந்தை பெற்றால் 1 வருட சம்பளத்துடன் லீவ்.. அரசாணை வெளியீடு!

Follow Us