புகைப்படம், வீடியோ, ரீல்ஸுக்கு இனி இடமில்லை! – தமிழக கோயில்களில் நாளை முதல் செல்போன் தடை
பக்தர்களிடம் இருந்து செல்போன்களைப் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரசீதும் வழங்கப்படும். பக்தர்கள் கோயிலில் இருந்து திரும்பிச் செல்லும்போது, தங்களது செல்போன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 31, 2026: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில கோயில்களில் பக்தர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் கோயிலுக்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், கோயில்களின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளை முதல் கோயிலிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை:
அதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது.
கோயில்களுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள வசதிக்கு ஏற்ப பாதுகாப்புப் பெட்டகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பெட்டகம் – ரூ. 5 கட்டணம்:
பக்தர்களிடம் இருந்து செல்போன்களைப் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரசீதும் வழங்கப்படும். பக்தர்கள் கோயிலில் இருந்து திரும்பிச் செல்லும்போது, தங்களது செல்போன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோயில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துதல், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த அறிவிப்புப் பலகைகள் கோயில் நுழைவாயில் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒலிபெருக்கி மூலமாகவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும்.
கோயில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவது, புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது உள்ளிட்டவற்றை கண்காணிக்க போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விதிகளை மீறி புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 3-ஆவது குழந்தை பெற்றால் 1 வருட சம்பளத்துடன் லீவ்.. அரசாணை வெளியீடு!
முக்கிய பிரமுகர்களுக்கும் கட்டுப்பாடு
முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கோயிலுக்குள் சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வருகை தருவதாக இருந்தால், ஒரு நாளுக்கு முன்பாகவே கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த கோயில்களில் தடை?
சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், திருவள்ளூர் வீரராகவர் கோயில், திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வருகிறது.
மேலும் படிக்க: மதுரையில் எஃப்கியூஎல் முதலீட்டு மோசடி.. பாதிக்கப்பட்ட இளைஞர் விபரீத முடிவு.. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள செல்போன் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும், திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி முருகன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், மதுரை அழகர் கோயில், கோவை கோனியம்மன் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் இந்தத் தடை அமலுக்கு வருகிறது.