கமலை அவமதிக்கும் பேச்சு.. கண்டுக்கொள்ளாத திமுக.. கடுப்பில் மநீம தொண்டர்கள்!
திமுக பேச்சாளரும் இயக்குநருமான கரு.பழனியப்பன், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை விமர்சித்ததாகக் கூறப்படும் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விஜயை விமர்சிக்க மாட்டேன், அவர் திமுகவுக்கு வந்துவிடுவார் எனக் கூறியதாகவும், இது கமலை அவமதிப்பதாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டியுள்ளது.

கமல்ஹாசன்
சென்னை, செப்டம்பர் 24: திராவிட முன்னேற்றக் கழகம் – மக்கள் நல மய்யம் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் இயக்குநரும், திமுக பேச்சாளருமான கரு.பழனியப்பனின் பேச்சு அமைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு பேசினார். அவர் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யை விமர்சிப்பதாக நினைத்து பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. மேடையில் பேசிய கரு.பழனியப்பன், ‘நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிக்க மாட்டேன். ஏனென்றால் திமுக தான் அடுத்த முறை அவருக்கு எம்பி சீட்டு கொடுக்க வேண்டும். அவர் திமுகவுக்கு எப்படியும் வந்துவிடுவார்’ என தெரிவித்தார்.
சர்ச்சையை கிளப்பிய பேச்சு
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், ‘ சினிமாவில் கமல்ஹாசனை போல இன்றைய நடிகர்கள் யாரும் இருக்க முடியாது. அவருக்கும் கட்சி தொடங்கி முதல்வராகும் ஆசை இருந்தது. ஆனாலும் முடியவில்லை. இதை வைத்து தான் கரு.பழனியப்பன் சூசகமாக சொல்கிறார்’ என தெரிவித்தார். ஆனால் இருவரின் கருத்துக்களும் கமலை அவமதிப்பது போல இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கூட்டணி பலமாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன் விளக்கம்
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு திமுகவை எதிர்த்து கட்சி தொடங்கிய கமல்ஹாசன், தற்போது அதே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். சமீபத்தில் கமல் மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவியேற்றார். இது தமிழக அரசியல் களத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனினும் திமுக கூட்டணியில் இடம்பெற்றது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்துவது போல கமல்ஹாசன் பற்றிய பேச்சு அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எதைப் பற்றியும் கவலையில்லை
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் மூத்த நிர்வாகி சினேகன், “தன்னுடைய பாதையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நடையுடன் கமல்ஹாசன் சென்று கொண்டிருக்கிறார். ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவர் தனது வழியில் எதை நோக்கி நகர நினைக்கிறாரோ அங்கு செல்கிறார். ஆனால் இங்கு கூட்டணியை உடைப்பது போல, ஒரு நெருடலை ஏற்படுத்துவது போல, ஒரு அழகான உறவை களங்கப்படுத்துவது போல பேசுகிறார் என்றால் வேறு யாருக்காவது இவர் ஸ்லீப்பர் செல்லாக பணியாற்றுகிறாரோ என்ற சந்தேகம் தான் எங்களுக்கு எழுகிறது.
இதையும் படிங்க: இது கூட்டணி அல்ல… அதற்கும் மேல் புனிதமானது.. திமுக குறித்து கமல்ஹாசன் விளக்கம்
இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டியதும், இதை சரியாக கையாள வேண்டியதும் திமுகவின் கடமையாகும். எங்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. இதே மாதிரி ஆயிரம் விமர்சனங்களை நாங்கள் கடந்து வந்திருக்கிறோம். இதையும் கடந்து போவோம். கரு.பழனியப்பனின் விமர்சனம் எங்களை ஒருபோதும் எதுவும் செய்யாது. அவர் சந்தேகப்பட வேண்டிய இடத்தில் அவரே வந்து நிற்கிறார். அதனால் திமுக தலைமை இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.