யாருடன் கூட்டணி?.. “பிரேமலதா தான் துணை முதலமைச்சர்”.. தேமுதிக மாநாட்டில் பரபர!!
தேர்தல் வந்தாலே ‘தேமுதிக பேரம் பேசும்’ என்கிறார்கள். ஆனால், கூட்டணி குறித்து நான் எப்போதுமே எங்கள் நிர்வாகிகளுடனே பேசுவேன். வேறு யாருடனும் அல்ல. தமிழகத்தில் தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நம்மை இணைக்கும் கட்சிதான் ஆட்சியில் அமரும் என பிரேமலதா கூறினார்.
கடலூர், ஜனவரி 10: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசாரில் நேற்று தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையேற்றார். அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன், விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.மாநாடு மேடையின் நடுப்பகுதியில் விஜயகாந்த், சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று அவரது சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு உணர்ச்சிவசப்பட்ட பிரேமலதா, விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதை கண்ட தொண்டர்களும் உற்சாக மிகுதியில் திளைத்தனர்.
மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!
பிரேமலதா துணை முதலமைச்சர் – சுதீஷ்:
மாநாட்டில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பேசியதாவது, “2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெறும். பிரேமலதா விஜயகாந்த் தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார். நமது கூட்டணிதான் வெற்றி கூட்டணி. பின்னர் நன்றி தெரிவிப்பு மாநாட்டையும் இதே இடத்தில் நடத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
யாரும் நம்மை தவிர்த்து ஆட்சி அமைக்க முடியாது:
மாநாட்டில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக முதல் வெற்றி கண்ட மண்ணே கடலூர். இது எங்கள் கோட்டை. விஜயகாந்துக்கு இணையான தலைவர் இல்லை. தேர்தல் வந்தாலே ‘தேமுதிக பேரம் பேசும்’ என்கிறார்கள். ஆனால், கூட்டணி குறித்து நான் எப்போதுமே எங்கள் நிர்வாகிகளுடனே பேசுவேன். வேறு யாருடனும் அல்ல. தமிழகத்தில் தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நம்மை இணைக்கும் கட்சிதான் ஆட்சியில் அமரும்” என்றார்.
யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுத்துவிட்டோம்:
“என்ன கொள்கை?” என்று கேட்பவர்களிடம் “வெற்றிதான் எங்கள் கொள்கை” என்று சொல்லுங்கள். ஜனவரி 9 அன்று கூட்டணி அறிவிப்பேன் என்றேன். ஆம் இன்று அந்த தேதி. யாருடனும் கூட்டணி வைக்க வேண்டுமென்பது முடிவாகிவிட்டது. ஆனால், இந்த மேடையில் அறிவிக்க வேண்டுமா என்பது கேள்வி. எந்த கட்சியும் இன்னும் அறிவிக்காததால், நாமும் சிந்தித்து தெளிவாக முடிவு எடுப்போம் என்றார். “தை பிறந்தால் வழி பிறக்கும். இதுவரை சத்தியமானவர்களாக இருந்தோம். இனி சாணக்கியமாக சிந்தித்து செயல்பட வேண்டும். ஆளும் கட்சி கூட கூட்டணியை அறிவிக்கவில்லை. நாம் ஏன் அவசரப்பட வேண்டும்? நம்மை மதிக்கும் கட்சிகளுடன் மட்டுமே ஒத்துழைப்போம்” என்றார்
மேலும் படிக்க: தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!
மகத்தான கூட்டணி அமையும்:
இன்னும் சிறிது பொறுமையாக காத்திருங்கள். மகத்தான கூட்டணியை மாவட்ட செயலாளர்கள் ஒப்புதல் பெற்ற பின் அறிவிப்போம். எல்லோருக்கும் உரிய தொகுதிகள் கிடைக்கும். வெற்றிதான் நம் நோக்கம். யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்தும், மாவட்ட செயலாளர்களும் காண்பித்துவிட்டார்கள். நாம் போட்டியிடும் தொகுதிகளை உரிய முறையில் பெற்று, மகத்தான கூட்டணி அமைப்போம் என்றார்.