இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. கோவில்களில் மாலை நடை சாத்தப்படுகிறது..
Lunar Eclipse 2026: முழு நிலவாக மாலை 5.10க்கு காட்சி அளிக்கும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் சூரிய மறைவிற்குப் பிறகே நிலவு உதிக்கும் என்பதால், கிரகணத்தின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே பார்க்க முடியும். மாலை 6.47 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.
சென்னை, மார்ச் 03: 2026ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தின்போது, இன்று வானில் அதிசய நிகழ்வாக நீல விளிம்புடன் அடர் சிவப்பு நிலாவை காணலாம் என்று வானியல் வல்லுநர்கள் கூறினர். இந்த முழு கிரகணத்தின் போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைகிறது. இதனால் நிலவு அடர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இது ‘பிளட்-மூன்’ (Blood Moon) எனப்படுகிறது.
இதையும் படிக்க: திருவண்ணாமலை: சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா?
நீல விளிம்புடன் அடர் சிவப்பு நிலவு:
இன்று நீல விளிம்புடன் அடர் சிவப்பு நிலவை பார்க்கலாம். நிலவு, பூமி, நிழலின் மையப்பகுதி வழியாக செல்லும் இம்முறை, அது ‘அம்ப்ரா’ நிழலின் மேல் விளிம்பை தொட்டு மெதுவாக உரசிச் செல்லும். இதனால், சூரிய ஒளி பூமியின் உயர்ந்த வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் வழியாக செல்லும். அப்போது, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் உறிஞ்சப்படுகிறது. அடர் நீல நிறம் மட்டும் நிலவின் விளிம்பில் மெல்லிய கோடாக தோன்றும்.
வெறும் கண்ணால் பார்க்கலாம்:
சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். தெளிவாக காண தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம். அஸாம், அருணாச்சலபிரதேசம், மேகாலயாவில் முழுமையாக காண முடியும். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறுதி பகுதி மட்டும் தெரியும்.
முழு நேர சந்திர கிரகணம்:
பகுதி நேர கிரகணம் மாலை 3.20 மணிக்கும், முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி, இன்று மாலை 4.45 மணிக்கு தொடங்குகிறது. முழு நிலவாக மாலை 5.10க்கு காட்சி அளிக்கும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் சூரிய மறைவிற்குப் பிறகே நிலவு உதிக்கும் என்பதால், கிரகணத்தின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே பார்க்க முடியும். மாலை 6.47 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிழக்கு அடிவானத்தைச் சுற்றி ரத்த நிலவின் சிறந்த காட்சிகளைக் காணமுடியும்.
கோவில் நடை சாத்தப்படும்:
பொதுவாக சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நாட்களில் கோவில்களுக்கு செல்வதை இந்துக்கள் தவிர்க்கின்றனர். எதிர்மறை ஆற்றல் அதிகமாக வெளிப்படும் போது அதன் தாக்கம் கோவிலையும், பக்தர்களையும் எந்த விதத்திலும் தாக்கக்கூடாது என்று நம்பிக்கையில் கோவில் நடைகள் சாத்தப்படுகிறது.
2 மணியில் இருந்த கிரகணம் முடியும் வரை:
தமிழ்நாட்டில் கோவில்களில் காலை பொழுதில் கோவில்கள் திறந்து இருக்கும். பகல் 2 மணியில் இருந்து கிரகணம் முடியும் வரை கோவில் நடைகள் சாத்தப்பட்டு தரிசனம் நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு மேல் நடைதிறந்து புண்ணியாவாஜனம் என்ற கலச பூஜை முடிந்த பின்னர் இரவு குறிப்பிட்ட நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இது கோவிலுக்கு கோவில் மாறுபடலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிக்க: சனிப்பெயர்ச்சி 2026.. மேஷ ராசியினரே எச்சரிக்கை.. தொந்தரவுகளை அள்ளித்தரும் ஏழரை சனி..
இரவு 8 மணிக்கு மேல் நடை திறக்கப்படும்:
சந்திர கிரகணத்தையொட்டி ஆகம விதிகளின் படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திரகிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாக நடை சாத்தப்படுகிறது. கிரகணம் முழுமையாக நிறைவடைந்த பின்னர் இன்று இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அதன் பிறகு இரவு 8.30 மணியிலிருந்து சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனையொட்டி சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை தியாகராயநகரில் உள்ள கோவிலிலும் நடை சாத்தப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.