Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் – பெரம்பலூர் மக்களுக்கு விஜய் உறுதி..

TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 அன்று தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் – பெரம்பலூர் மக்களுக்கு விஜய் உறுதி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Sep 2025 13:14 PM IST

செப்டம்பர் 14, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத சூழலை கருதி, மீண்டும் ஒரு நாள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து மக்களை சந்திப்பதாக உறுதி அளித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் அதன் முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 13, 2025 தேதியான நேற்று, தமிழக வெற்றி கழக தலைவர் தனது முதல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், திருச்சி விமான நிலையம் அடைந்தவுடன் திரளான தொண்டர்களால் அவரது பிரச்சார வாகனம் மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றது. ஆறு கிலோமீட்டர் தூரத்தை அடைவதற்கு சுமார் ஐந்து மணி நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் காலை 11.30 மணிக்கு நடைபெற வேண்டிய பிரச்சாரம் மாலை நான்கு மணிக்கு தொடங்கியது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரம்:

திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலக அலுவலகம், பாலக்கரை மற்றும் மரக்கடை பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பரப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சுமார் நான்கு மணி நேரம் கழித்து அரியலூர் மாவட்டத்திற்கு சென்றடைந்தார். அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே அவர் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழக அரசை கடுமையாக விமர்சித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதாவது, “தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது? எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க:  அழைக்கும் பாஜக மேலிடம்? டெல்லி செல்லும் இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!

அதேபோல், “தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தால் எதை செய்ய இயலும், அதை மட்டுமே வாக்குறுதிகளாக கொடுப்போம்” எனவும் குறிப்பிட்டிருந்தார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்களால் ரத்து செய்யப்பட்ட பெரம்பலூர் திட்டம்:

இரவு 9 மணியளவில் அரியலூரில் இருந்து பெரம்பலூரை நோக்கி செல்ல பயணம் தொடங்கினார். ஆயிரக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்களில் அவரது பிரச்சார வாகனத்தை தொடர்ந்து சென்றனர். ஒரு கட்டத்தில் நள்ளிரவு 12 மணியை கடந்தும் அவரது பிரச்சார வாகனத்தைச் சுற்றி லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இதன் காரணமாக பிரச்சார வாகனம் ஒரு அடி கூட நகர முடியாமல், ஒரு மணி நேரம் அதே பகுதியில் நிற்கும் சூழல் ஏற்பட்டது.

மேலும் படிக்க: ‘திருச்சியின் வளர்ச்சியை விஜய் பார்க்கவில்லை’ அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்

பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன் – தலைவர் விஜய்:


நல்லிரவைத் தாண்டி, மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெரம்பலூர் செல்லக்கூடிய பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதாக முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. “பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக உங்களை சந்திக்க மீண்டும் வருவேன்” என தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் நேற்றைய பிரச்சார பயணம் அரசியலில் பெரும் பேசப்பொருளாக மாறியுள்ளது.