Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?.. தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய்யின் புதிய பிளான்?

ஜனநாயகன் பட ரிலீஸில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆதரவுகளை பார்த்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டாம், அவர்கள் மோசடி பேர்வழிகள் என தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விஜய்க்கு அறிவுரை வழங்கினார்.

தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?.. தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய்யின் புதிய பிளான்?
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jan 2026 07:58 AM IST

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் புதிய பிரசாரத் திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக சார்பில் கடைசியாக ஈரோட்டில் செங்கோட்டையன் தலைமையில், பிரம்மாண்ட பொதுகூட்டம் நடந்தது. அதன்பின், அடுத்த கூட்டம் சேலத்தில் நடக்க உள்ளதாக கூறப்பட்டது. எனினும், ஜனநாயகன் ரிலீஸ் பரபரப்பில், அப்பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், சேலம் அல்லது தருமபுரியில் பிரமாண்ட மக்கள் சந்திப்பை விரைவில் தவெக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.  அந்த நிகழ்வில், தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் ஒதுக்கீடு செய்து அனுப்பியுள்ள தவெக கட்சியின் தேர்தல் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிக்க: யாருடன் கூட்டணி?.. “பிரேமலதா தான் துணை முதலமைச்சர்”.. தேமுதிக மாநாட்டில் பரபர!!

கூட்டணி உருவாக்கத்தை நோக்கி முயற்சி:

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவீரமாக களம் இறங்கியுள்ளது.இதற்காக அண்மையில் விஜய் அடுத்த கட்ட பிரசாரத்தை நேரடியாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார். கூட்டணி அமைப்பதிலும் தவெக தலைமை கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில், தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.கூட்டணி உறுதி செய்யப்படும் நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களும் விஜயும் ஒன்றாக மேடையேறும் மிகப் பெரிய பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.

தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?

இதனிடையே, நேற்று கடலூரில் நடந்த தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், “2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெறும். பிரேமலதா விஜயகாந்த் தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார். நமது கூட்டணிதான் வெற்றி கூட்டணி என்று கூறியிருந்தார். இதனை வைத்து பார்க்கும் போது, தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்று வெளிப்படையாக அறிவித்த முதல் கட்சி தவெக தான். அதனால், சட்டமன்ற தேர்தலில் தவெக – தேமுதிக கூட்டணி உறுதியானதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

விஜய்க்கு அறிவுரை வழங்கிய விஜயபிரபாகரன்:

குறிப்பாக நேற்றைய மாநாட்டில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிராபகரன், விஜய் அண்ணணுக்கு அறிவுரை ஒன்றை வழங்குவதாக பேசியிருந்தார். அதாவது, ஜனநாயகன் பட ரிலீஸில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆதரவுகளை பார்த்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டாம், அவர்கள் மோசடி பேர்வழிகள் என்று கூறியிருந்தார். அதோடு, அரசியலில் தங்களை விட தனக்கு அனுபவம் உள்ளது என்றும் தனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் தவெக:

இதனிடையே, தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜய் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு மக்களின் முன்னேற்ற மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான முழுமையான தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது”. இந்த அறிக்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழு, பொது மக்கள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் சங்கங்கள், வர்த்தக சபைகள், தொழில் வல்லுநர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பு நபர்களிடமிருந்து பிரச்சினைகள், தேவைகள் மற்றும் கருத்துக்களை சேகரிக்க உள்ளது.

இதையும் படிக்க: தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!

அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றும் வண்ணம் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த செயல்முறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.