சென்னை, ஜனவரி 9 : கரூரில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) மேற்கொண்ட பரபரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் விஜய் பரபரப்புரை நடைபெற்ற இடம் உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை நடைபெற்றது. சமீபத்தில் தவெக கட்சி நிர்வாகிகள் என்.ஆனந்த், மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு விஜய் பங்கேற்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செல்லும் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது வருகிற ஜனவரி 12, 2026 அன்று ஆஜராக வேண்டும் என கூறப்பட்ட நிலையில் விஜய் அதற்கு முதல் நாள் டெல்லி செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர். இது விஜய்க்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க : அடுத்த கட்ட அரசியல் பயணம்.. ஜன.14ல் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?
தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு
சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் என தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு சவாலாக மாறியுள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க 12 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு குழுவை அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்படுவதாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : எடப்பாடியுடன் சந்திப்பு…உறுதி செய்யப்பட்டதா அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு…நயினார் கூறுவது என்ன!
இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில், இந்த குழு பொதுமக்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதாரம் மற்றும் தொழில் நிபுணர்கள், வர்த்தக சங்கங்கள், ஊழியர் சங்கங்கள், விவசாயிகள் அமைப்புகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் தகவல்களை சேகரித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்யவுள்ளனர். இந்த சிறப்பு குழுவில் அருண் ராஜ், பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார், அருள் பிரகாசம், பரணி பாலாஜி, முகம்மது பர்வேஸ், பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா மற்றும் சத்யகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.