அடுத்த கட்ட அரசியல் பயணம்.. ஜன.14ல் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?
டிடிவி தினகரனை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிருப்தியடைந்த பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியை கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வசமுள்ள இரண்டே தேர்வுகள் ஓன்று திமுக, மற்றொன்று தவெக. இவை இரண்டில் அவர் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிகிறது.
சென்னை, ஜனவரி 09: வரும் ஜனவரி 14ம் தேதி ஓ.பன்னீர்செல்வத்தின் பிறந்தநாளாகும். அன்றைய தினம் அவர் தனது அடுத்த கட்ட அரசியல் பயணம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியோடு, தங்களது கூட்டணியை உறுதி செய்வது, வேட்பாளரை இறுதி செய்வது என மும்மூரமாக இயங்கி வருகின்றனர். கண்டிப்பாக இம்மாத இறுதிக்குள் பெரும்பாலான கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்துவிடும். ஏற்கெனவே, முதல் ஆளாக அதிமுக, பாஜக, பாமக கூட்டணியை அறிவித்துள்ளன. தொடர்ந்து, இன்று தேமுதிக தனது கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளது. இப்படி, தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!
இந்த சூழ்நிலையில், டிடிவி தினகரனை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பெங்களூருவில் இருந்து டிடிவி தினகரன் நேற்றைய தினம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி வடிவத்தை எட்டியதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிமுக–பாஜக கூட்டணியில் பாஜக பெற்றுள்ள தொகுதிகளில் சிலவற்றை, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு வழங்கும் வகையில் பேச்சுகள் நடந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இந்த கூட்டணியில் அதிமுக, பாஜக, தமாகா, பாமக ஆகியவை இணைந்துள்ள நிலையில், அமமுகவும் இடம் பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.




ஓரம்கட்டப்பட்ட ஓபிஎஸ்?
கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேட்சை சின்னத்தில் தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதில், தோல்வியை தழுவியிருந்தாலும், அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்திருந்தார். தொடர்ந்து, பாஜகவுடன் இணைக்கமாக இருந்த வந்த அவர், கடந்த 2025 ஏப்ரல் மாதம் நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதும், தனக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என குற்றஞ்சாட்டி அக்கூட்டணியில் இருந்து விலகினார்.
இதனிடையே, கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் பாஜக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு அண்ணாமலை கடும் முயற்சி மேற்கொண்டு வந்தார். அதேபோல், அண்ணாமலை தான் டிடிவி தினகரனிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், டிடிவி தற்போது அமித்ஷாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவிட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை எனத் தெரிகிறது. ஏனெனில், அவர் தனிப்பட்ட முறையில் எந்த கட்சியும் இல்லாமல் இருப்பதோடு, திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெகவா? அல்லது திமுகவா?
இதனால், அதிருப்தியடைந்த பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியை கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வசமுள்ள இரண்டே தேர்வுகள் ஓன்று திமுக, மற்றொன்று தவெக. இவை இரண்டில் அவர் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிகிறது. திமுகவே அவரது தேர்வாக இருக்கும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க: தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!
அந்தவகையில், சென்னையில் தனியார் ஹோட்டலில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து கருத்து கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, புதிய கட்சி தொடங்குவதா?, தவெக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த அவரிடம், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தயவு செய்து பொறுமையாக இருங்கள்.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறிச்சென்றார்.