புதிய கூட்டணியை கட்டமைக்கிறதா தவெக?.. முதல்வர் விஜய் தலைமையில் இன்று தோழமை கட்சிகள் கூட்டம்!
தேர்தல் கூட்டணியை நோக்கிய நகர்வாக மட்டுமின்றி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலையும் இக்கூட்டணியாகச் சந்திக்க தவெக தயாராகி வருகிறது. "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற தவெக-வின் கொள்கை நிலைப்பாட்டின்படி, தோழமைக் கட்சிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் பதவிகள் மற்றும் முக்கிய உள்ளாட்சிப் பதவிகளைப் பிரித்து அளிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை, ஜூலை 01: தமிழக வெற்றிக் கழக அரசு அமைவதற்கு ஆதரவளித்த தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், புதிய தேர்தல் கூட்டணியை கட்டமைக்கும் நோக்கில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, தற்போது தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்து 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களான 117 இடங்களை தவெக தனித்து பெற முடியாத சூழல் ஏற்பட்டபோது, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இடதுசாரி கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்), மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெக-விற்கு தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வழங்கின. இந்த ஆதரவின் அடிப்படையில் சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபித்து தவெக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.
மேலும் படிக்க: அதிமுக துணை பொதுச்செயலர் பதவி வேண்டாம்.. எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி!
மாறும் அரசியல் கூட்டணிகள்:
தற்போது தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் வேகமாக மாறி வருகின்றன. திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல், மதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. மேலும், இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவையும் தாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. விசிக மட்டுமே இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.




இன்று நடைபெறும் முக்கிய சந்திப்பு:
இந்தச் சூழ்நிலையில், தவெக அரசு அமைவதற்கு உறுதுணையாக இருந்த தோழமை மற்றும் ஆதரவு கட்சிகளின் நிர்வாகிகளைச் சந்திக்கும் முக்கிய நிகழ்வை தமிழக வெற்றிக் கழகம் இன்று முன்னெடுக்கிறது. தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த ‘நட்பு சக்திகள் சந்திப்பு’ கூட்டமானது, 2029 ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணியாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தவெக-வை எதிர்த்த முகாம்களில் இருந்து, தற்போது தவெக-விற்கு ஆதரவளிக்கும் இயக்கங்களாக மாறியுள்ள இக்கட்சிகளை ஒன்றிணைத்து, ஒரு புதிய வலுவான கூட்டணியை உருவாக்க தவெக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதிகாரப் பகிர்வு:
தேர்தல் கூட்டணியை நோக்கிய நகர்வாக மட்டுமின்றி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலையும் இக்கூட்டணியாகச் சந்திக்க தவெக தயாராகி வருகிறது. “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற தவெக-வின் கொள்கை நிலைப்பாட்டின்படி, தோழமைக் கட்சிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் பதவிகள் மற்றும் முக்கிய உள்ளாட்சிப் பதவிகளைப் பிரித்து அளிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தில் பங்கேற்போர்:
அந்தவகையில், முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தரப்பில் மூத்த அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காது என்று அந்தக் கட்சிகளின் தலைமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த போதிலும், தற்போதைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற இடதுசாரிகளின் இந்த திடீர் அறிவிப்பு தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் கட்சிகளின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில-மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் பலரும் இக்கூட்டத்திற்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க: எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!
இதற்கான முறையான அழைப்பிதழ்களை தவெக-வின் மூத்த அமைச்சர்களான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரடியாக அந்தந்தக் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று கட்சித் தலைவர்களிடம் வழங்கியுள்ளனர். இன்றைய தினம் நடைபெறவிருக்கும் தவெக மற்றும் தோழமை கட்சிகளின் இந்தச் சந்திப்பு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்று கூட்டணியை உருவாக்குவதற்கான முக்கிய திருப்புமுனையாகவும், முதல்படியாகவும் அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.