குன்னூர் விநாயகர் கோவிலில் ரூ.15 கோடி கார் பார்க்கிங் திட்டம் ரத்து.. இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!
Coonoor Vinayagar Temple Car Parking : நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் ரூ.15 கோடியில் அறிவிக்கப்பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரம்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பி. கே. சேகர்பாபு ரூ.10 முதல் ரூ.15 கோடி கோயில் நிதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க திட்டமிட்டார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மேற்கண்ட கோவிலில் மாதத்துக்கு வெறும் 500 பக்தர்கள் மட்டுமே வந்து செல்லும் நிலையில், கோவில் நிதியில் இவ்வளவு பெரிய தொகையில் கார் பார்க்கிங் அமைப்பது தேவையற்றது என தெரிவித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், நலிவடைந்த திருக்கோவில்களின் நிலையை மேம்படுத்துவதற்கும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்வதற்கும், வருவாயை பெருக்குவதற்காகதான் கார் பார்க்கிங் வசதி அமைக்க திட்டமிட்டதாக விளக்கினார்.
ரூ.15 கோடி மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து
அப்போது, அமைச்சர் ரமேஷ் எழுந்து மக்கள் அடிப்படை தேவைகளை மட்டுமே கேட்டு வருகின்றனர். மல்டி லெவல் கார் பார்க்கிங் கேட்கவில்லை என்று தெரிவித்தார். இவ்வாறாக விவாதம் நடைபெற்ற நிலையில் தற்போது குன்னூர் விநாயகர் கோவில் பகுதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டும் திட்டத்தை ரத்து செய்வதாக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற மானிய கோரிக்கையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றமா? அது பேராபத்து… சீமான் விடுத்த எச்சரிக்கை!




கார் பார்க்கிங் கட்டுமான பணிகளுக்கான ஆணை ரத்து
தற்போது இந்த திட்டம் தொடங்கப்படாத நிலையில் கட்டுமான பணிகளுக்கான ஆணை ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் அறநிலைய துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் வரும் வருமானம் அந்தந்த கோவில்களின் புனிதமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தற்போதைய தவெக அரசாணை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தற்போது குன்னூர் விநாயகர் கோவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்
இதனிடையே, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் கோவில் நிதி புனிதமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது பாஜகவின் கொள்கையை ஒத்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் திருமண மண்டபங்கள், பல அடுக்கு வாடகை கட்டிடங்களுக்கு மட்டும் பொருந்துமா அல்லது கல்வி நிலையம் போன்றவற்றிற்கும் பொருந்துமா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அமைச்சர் ரமேஷ் கல்வி நிலையம் போன்றவற்றை நிறுத்த திட்டம் இல்லை. நீதிமன்ற தடை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சில பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: அனைத்திலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு… முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!