ஜெம் வீரமணி வழக்கு.. “ஆதாரம் இருந்தா SIT-கிட்ட குடுங்க!”.. முதல்வர் விஜய்க்கு செக் வைக்கும் திமுக!!
TR Baalu Demands SIT Summons for CM Vijay: ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (SIT) திமுக பொருளாளர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, செப்.28: தமிழ்நாடு அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு விவகாரத்தில், திமுக மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் அதன் தலைமை மீதும் அவதூறு பரப்பும் வகையில் பொதுவெளியில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகிய மூவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளரும் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் மனு அளித்துள்ளார்.
இதையும் படிக்க: ஒரே ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த வழக்கு.. தவெக எம்.எல்.ஏ.வின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
திமுக மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்:
கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், ஜெம் வீரமணியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பாதுகாப்பதாகப் பொதுவெளியில் குற்றம் சாட்டியிருந்தார். அதே நாளில், அமைச்சர் ஆதவ அர்ஜுனாவும் ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்ததோடு, அவர் மீதான வழக்கையும் தவறாக முடித்து வைத்ததாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26-ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ஜெம் வீரமணியைப் பாதுகாப்பதற்காக திமுக அவரிடமிருந்து ₹500 கோடி பெற்றதாகக் குற்றம் சுமத்தினார். இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அளிக்கப்பட்ட மனு:
இக்குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஆர். பாலு அளித்துள்ள மனுவில், பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கூற்றுகள் மூன்று விதமான அம்சங்களை வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் திமுக தலைமையின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் சொல்லப்பட்டவை. ஒருவேளை இவர்களிடம் வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்கள் இருந்தால், அதைச் சட்டப்படி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் மறைத்துள்ளனர். அல்லது, வழக்கு விசாரணையின் கேஸ் டைரியில் உள்ள ரகசியத் தகவல்களைச் சட்டவிரோதமாகப் பெற்றுப் பொதுவெளியில் பரப்பியுள்ளனர்.
எனவே, இவர்களிடம் உள்ள ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை உடனடியாகப் பெற வேண்டியது அவசியமாகும். ரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தன, அவை ஏன் இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் வழங்கப்படவில்லை என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: “திமுக வென்றால் பதவி விலகுகிறேன்!”.. உதயநிதிக்கு ஓபன் சவால் விட்டு ஆவேசப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!
சட்டப்பூர்வ நடவடிக்கைக்கான வலியுறுத்தல்:
சிறார்கள் பாதிக்கப்பட்ட இந்த உணர்வுப்பூர்வமான வழக்கில் ஆதாரங்கள் மறைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அப்பொழுதுதான் விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றும் டி.ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் திட்டமிட்டுப் பொய்யாக முன்வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ அல்லது விசாரணை ரகசியங்கள் மீறப்பட்டிருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். குற்றவாளி எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்று அம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.