வீட்டு உபயோக பொருட்களின் விலை 5-8% உயரப்போகிறது?.. தீபாவளிக்கு முன்பு நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!
Home Appliance Prices Set to Rise | இந்தியாவில் விரைவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படும் நிலையில், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வீட்டு உபயோக மற்றும் மின்சாதன பொருட்களின் விலைகளை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி (Diwali). ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது வணிக நிறுவனங்கள் அசத்தல் தள்ளுபடிகளை அறிவிக்கும். ஜவுளிக்கடை முதல், மின்சாதன பொருட்கள், உணவகங்கள் என எங்கு பார்த்தாலும் சலுகைகளும், தள்ளுபடிகளும் கொட்டிக் கிடக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் சிலர் தீபாவளி பண்டிகையின் போது வீட்டுக்கு தேவையான பொருட்களை, மின்சாதன பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டு இருப்பர்.
அந்த வகையில், இந்த ஆண்டு பெரும்பாலான பொதுமக்கள் தீபாவளி சலுகைகள் மட்டும் தள்ளுபடிகளுக்காக காத்திருந்த நிலையில், வீட்டு உபயோக மற்றும் மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிர்ச்சி அளிக்ககூடிய முடிவை எடுத்துள்ளன. அதாவது, வீட்டு உபயோக மற்றும் மின்சாதன பொருட்களின் விலையை உயர்த்த அவை திட்டமிட்டுள்ளன.
இதையும் படிங்க : பெற்றோர்களே.. பால் ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய செப்.30 தான் கடைசி தேதி!




5 முதல் 8 சதவீதம் வரை விலை உயர்த்த உள்ள நிறுவனங்கள்
வழக்கம் போல் இல்லாமல் இந்த ஆண்டு பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே நிறுவனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் ஏசி, எல்ஈடி டிவி, வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலைகளை 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த புதிய விலை உயர்வை அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு கொண்டுவர நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
காப்பர், ஸ்டீல், கச்சா எண்ணெய், இறக்குமதி செலவு என அனைத்தும் அதிகரித்துள்ளதன் காட்ரணமாக விலை உயர்த்தும் கட்டாயத்தில் உள்ளதால் வணிகர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். வணிக நிறுவனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்களின் விலையை 2026 ஆம் ஆண்டில் மட்டும் மூன்று முறை உயர்த்தியுள்ளன. இந்த நிலையில் தான், இந்த நிறுவனங்கள் அடுத்த விலை உயர்வுக்கு தயாராகியுள்ளன.
அக்டோபர் முதல் இந்த நிறுவனங்கள் விலை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், செப்டம்பர் மாதத்திலேயே இந்த பொருட்களை வாங்குவதன் மூலம் சேமிக்க முடியும்.