ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்.. நீதிமன்ற தலையீடு முதல் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு வரை முழு விவரம்!!
Jem Veeramani Case: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கிலும், பிளாக்மெயில் மற்றும் பணப் பரிமாற்ற விவகாரத்திலும் ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் வெளிவந்துள்ளன. நீதிமன்ற தலையீடு, சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு மற்றும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் தொடர்பு எனத் தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கின் முழுமையான விவரங்கள்.
சென்னை, செப்.27: தமிழ்நாட்டைப் பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கிய ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு, நாளுக்கு நாள் புதிய மற்றும் திடுக்கிடும் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், ரகசிய வீடியோ ஆதாரங்கள், மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சிகள், காவல்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மற்றும் நீதிமன்றத்தின் அதிரடித் தலையீடு என இந்த விவகாரம் பல கட்டங்களைக் கடந்துள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் முதல் குற்றவாளியாக ஜெம் கிரானைட் வீரமணி சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு நபர்களின் பெயர்களும் பின்னணியும் விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!
மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சி:
வீரமணியின் பாலியல் குற்றங்களுக்குத் துணையாக இருந்த அவரது தோழி சாந்தி, ஒரு கட்டத்தில் வீரமணியையே மிரட்டிப் பணம் பெற முயன்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாக்மெயில் சம்பவத்திற்குச் சாந்தியின் கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் அவரது நண்பரான காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் ஆகியோர் உடந்தையாகச் செயல்பட்டுள்ளனர். மேலும், வீரமணியை மிரட்டுவதற்காக ஜான் பாண்டியனுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததே ரஞ்சன்குமார் தான் என்று சாந்தி வாக்குமூலம் அளித்துள்ளார். கட்டப் பஞ்சாயத்துக்காக அவர்கள் தன்னைச் சந்தித்தது உண்மைதான் என்றாலும், அவர்களின் கோரிக்கையைத் தான் ஏற்க மறுத்துவிட்டதாக ஜான் பாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார்.
விசாரணை வளையத்தில் சகோதரர், உதவியாளர்:
இவ்வழக்கின் தொடர் விசாரணையில் வீரமணியின் உதவியாளரான கணேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், நிலம் விற்பனை தொடர்பான விவகாரங்களில் வீரமணியின் சகோதரரான ஆசை தம்பிக்குச் சில முக்கியமான தகவல்கள் தெரியும் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் ஆசை தம்பியும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், அவர் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். இதற்கிடையே, வீரமணிக்கு தொடர்புடையவராகக் கூறப்படும் பிரகாஷ், வழக்கு தொடர்பான பணப்பரிமாற்றம் குறித்துப் பாலியல் குற்றங்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளான மகேஷ்குமார் மற்றும் ராஜலட்சுமியிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் ராஜலட்சுமி என்பவருக்கு இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் சாந்தி, பிரகாஷ் உள்ளிட்டோர் பணத்தைப் பிரிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளதால், பிரகாஷை தேடும் பணிகளைக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
காவல்துறையின் ஆரம்பகட்ட நடவடிக்கை:
இவ்வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் ஹரிஹரன் என்ற தொண்டு நிறுவன நடத்துநர் விபச்சார தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்திருந்தார். இந்தச் செய்தி அப்போதைய சென்னை காவல் ஆணையரான அருணின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மற்றொருபுறம், சாந்தியிடமிருந்து பெற்ற வீடியோ ஆதாரங்களை ஐஜி கண்ணனிடம் சமர்ப்பித்ததாக ரஞ்சன்குமார் குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட அந்தப் புகார் குறித்த அறிக்கையை ஐஜி கண்ணன், காவல் ஆணையர் அருணிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் உதவி ஆணையர் யாஸ்மீன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், காவல்துறை தரப்பில் இந்த வழக்கு உரிய முக்கியத்துவத்துடன் கையாளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?
எழும்பூர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இவ்வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கைக் கைவிடுவதாகக் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சூழலில், வழக்கில் தடையவியல் துறையின் அறிக்கை இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பத்மா, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தற்போதைய காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் வீரமணி, சாந்தி உள்ளிட்டோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். தற்போது இவ்வழக்கு விசாரணையை மேலும் தீவிரப்படுத்தத் தேன்மொழி, திஷா மிட்டல், முத்தரசி, கீதாஞ்சலி உள்ளிட்ட 11 உயர் காவல் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.