AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“பேஸ்மென்ட் வீக் -பில்டிங் ஸ்டிராங்.. ஆட்டம் காணும் திமுக ஆட்சி”.. இபிஎஸ் கடும் விமர்சனம்!!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.

“பேஸ்மென்ட் வீக் -பில்டிங் ஸ்டிராங்.. ஆட்டம் காணும் திமுக ஆட்சி”.. இபிஎஸ் கடும் விமர்சனம்!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Feb 2026 14:29 PM IST

சென்னை, பிப்ரவரி 06: அரசியல் ரீதியாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “‘ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் – கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதல்வர்’ ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அதிமுக செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது.

மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!

திமுகவின் உருட்டுக்கடை அல்வா:

2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக் கூட நிறைவேற்றவில்லை என்ற உண்மையை, மக்களுக்கு நாங்கள் நாள்தோறும் சொல்லி வருகிறோம். கவர்ச்சிகரமாக பல பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றும் இந்த விடியா அரசின் செயலை விளக்கும் வகையில், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் ‘திமுகவின் உருட்டுக்கடை அல்வா’ ஒன்றை தமிழக மக்களிடம் வழங்கினோம். மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டுவர வக்கற்ற ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற அரசு, மத்திய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வாய் ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது.

‘பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்’:

ஏமாற்று மாடல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின். ‘பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்’ என்று ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, இவருடைய ஆட்சியே ஆட்டம் கண்டு இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று வெற்றி, வெற்றி என்று இம்சை அரசின் 23ம் புலிகேசி போல் ஸ்டாலின் கூக்குரல் இட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.

தரக்குறைவாக பேசுவது ஸ்டாலினின் வாடிக்கையே:

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது. ‘சேற்றிலும், அசிங்கத்திலும் கல் வீசினால் அந்த சேறும், அசிங்கமும் தன்மீதுதான் படும்’ என்பதையும்; ‘மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் அது தன் மார்பில் தான் விழும்’ என்பதையும் உணராமல், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கவுரவத்தையும், மரியாதையையும், தகுதியையும் எண்ணிப் பார்க்காமல் உளரித் திரிவதை, ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: விமான பயணிகளுக்கு குட் நியூஸ்…சென்னை டூ திருச்சி-மதுரைக்கு சிறிய ரக விமான சேவை தொடக்கம்!

2.0 அல்ல – வெறும் ‘0’தான்:

தமிழக மக்களை, தேர்தல் களத்தில் நெஞ்சுரத்தோடு தலை நிமிர்ந்து அதிமுக சந்திக்கும். எங்களுடைய ஆட்சியின் மாட்சிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கும் வல்லமை எங்களுக்கு உண்டு. நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர்கள் நாங்கள். கடந்த ஐந்தாண்டுகால விடியா திமுக ஆட்சியில், ஒருசில மக்களின் நாக்கில் தேன் தடவும் வேலையைத் தவிர, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப் போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Follow Us