நண்பர்களே எமனாக மாறிய கொடூரம்.. போதை தகராறில் கத்திக்குத்து.. தீவிர சிகிச்சையில் உயிரிழந்த மீனவர்!
Thoothukudi Murder: தூத்துக்குடி மாவட்டத்தில் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகாறில் மீனவர்கள் உள்பட இருவருக்கு பலத்த கத்துக்குத்து சம்பவம் நடைபெற்றது. இதில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர், பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டோன் என்பவரது மகன் ஸ்னோவின் ( 26 வயது). மீன்பிடி தொழில் செய்து வந்த இவரும், தூத்துக்குடி திரேஸ்புரம் பூபால் ராயபுரத்தை சேர்ந்த ரவி என்பவரது மகன் சூசை ( 28 வயது) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு கரைக்கு திரும்பிய நிலையில் தூத்துக்குடி தாளமுத்து நகர் மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே மது அருந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் 2- ஆவது தெருவை சேர்ந்த மலைராஜ் மகன் சந்தனராஜ் ( என்ற) பாண்டி (20 வயது) மேட்டுப்பட்டி சங்கு கூலி காலனியை சேர்ந்த இசைக்கு முத்து மகன் முத்துக்குமார் ( என்ற) கருப்பு ( 20 வயது) உள்பட நான்கு பேர் அங்கு வந்து ஸ்னோவின் மற்றும் அவருடைய நண்பர்களுடன் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் திடீரெ வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரை கத்தியால் சரமாரியாக குத்திய நால்வர்
இதில், வாக்குவாதம் முற்றவே கைகலப்பானது. இதில், ஆத்திரம் அடைந்த சந்தனராஜ் என்ற பாண்டி மற்றும் முத்துக்குமார் என்ற கருப்பு உள்பட நான்கு பேரும் சேர்ந்து ஸ்னோவை சரமாரியாக தாக்கினர். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினர். இதனை தடுக்க முயன்ற சூசை என்பவருக்கும் தலையில் பயங்கரமான கத்தி குத்து விழுந்தது. இந்த சம்பவத்தை அறிந்த அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
மேலும் படிக்க: 21 வயது கீழ் இருப்பவர்களுக்கு மது பாட்டில் கிடையாது.. மீறினால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம்…




தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த மீனவர்
பின்னர், அருகில் இருந்தவர்கள் கத்தி குத்து சம்பவத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஸ்னோ மட்டும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சூசைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஸ்னோவின் சடலம் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்னோ மற்றும் சூசை குடும்பத்தினர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் காசி பாண்டியன், உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: இன்று தொடங்கும் ஊட்டி ரோஜா கண்காட்சி.. 4,000 ரகங்கள்.. பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்..