இன்று தொடங்கும் ஊட்டி ரோஜா கண்காட்சி.. 4,000 ரகங்கள்.. பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்..
இந்த ஆண்டு ரோஜா கண்காட்சியில் “பறவைகளை பாதுகாப்போம்” என்ற கருத்தை மையப்படுத்தி, பல வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு அன்னப்பறவை, ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி பறவை, தூக்கணாங்குருவி, கழுகு, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
மே 14, 2026: நீலகிரியின் ஊட்டியில் மிகவும் விமரிசையாக நடைபெறும் ரோஜா கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த கண்காட்சி வருகிற 18ஆம் தேதி வரை, அதாவது ஐந்து நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, கோடைகாலம் என்பதால் சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், கோடை விடுமுறை நடைபெற்று வருவதாலும், அதிகப்படியான மக்கள் உதகைக்கு வருகை தருகின்றனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பதிவாகி வருவதால் அங்கு குளுமையான காலநிலை நிலவி வருகிறது. கோடை சீசனை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மே மாதத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கும் ரோஜா கண்காட்சி:
இந்த நிலையில், ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் 21வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி, இன்று தொடங்கியுள்ள ரோஜா கண்காட்சி வருகிற 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, 4 ஆயிரம் ரகங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதுதவிர, பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனி பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரிய ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளதால், தற்போது அந்த மலர்களும் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.
ரோஜா பூக்களால் செய்யப்பட்ட பறவைகள்:
இந்த ஆண்டு ரோஜா கண்காட்சியில் “பறவைகளை பாதுகாப்போம்” என்ற கருத்தை மையப்படுத்தி, பல வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு அன்னப்பறவை, ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி பறவை, தூக்கணாங்குருவி, கழுகு, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரோஜா கண்காட்சிக்கு ரசிகர்கள் இருப்பது நிதர்சனமான உண்மையாகும். ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற இடங்களுக்கு செல்லும்போது மனதிற்கு ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதும் பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Also Read: மே 16ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் தொடரும் கனமழை..
ஐந்து நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தால், மக்களின் வரவேற்பைப் பொறுத்து மேலும் சில நாட்கள் கண்காட்சியை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என தெரிவித்தார்.
ரோஜா கண்காட்சி நிறைவடைந்த பின்னர், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் ஒருபுறம் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.