“தவெக அரசின் தவறுகளை ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்”.. அதிமுகவினருக்கு இபிஎஸ் வகுத்த அதிரடி வியூகம்!
Expose TVK govts errors through Reels: அதிமுகவிற்கென பிரத்தியேகமாகச் சமூக வலைதளங்களை ஒருங்கிணைக்கத் தனி 'வார் ரூம்' அமைக்கப்பட வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். தவெக-வின் வெற்றி என்பது நிலையாக இருக்காது. எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.
சென்னை, ஜுன் 14: தமிழக வெற்றிக் கழக அரசின் தவறுகளை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உடனுக்குடன் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி குறித்து ஆராய்வது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மட்டும் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி உரையாற்றினார்.
இதையும் படிக்க: “விசிக எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து வெளியே வரலாம்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் புதிய யுக்தி:
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதளங்களின் முக்கியத்துவம், யுக்தி மாற்றம், தனி ‘வார் ரூம்’ உள்ளிட்ட முக்கிய விபரங்களைக் குறிப்பிட்டு பேசினார். அதன்படி, அதிமுக நிர்வாகிகள் தங்களது சமூக வலைதள செயல்பாடுகளை பெருமளவில் அதிகரிக்க வேண்டும். சமூக வலைதளங்களைச் சரிவரக் கையாளாமல் விட்டதே தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கு முக்கியக் காரணம்.
அதிமுகவுக்கு தனி வார் ரூம்:
தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அதிமுகவிற்கென பிரத்தியேகமாகச் சமூக வலைதளங்களை ஒருங்கிணைக்கத் தனி ‘வார் ரூம்’ அமைக்கப்பட வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். தவெக-வின் வெற்றி என்பது நிலையாக இருக்காது. எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.
பலன் தேடி ஓடுகிறார்கள் – கே.பி.முனுசாமி சாடல்:
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், “அதிமுகவிலிருந்து யாரும் சாரை சாரையாக தவெக-விற்குச் செல்லவில்லை. கட்சியில் இத்தனை காலம் இருந்து பல்வேறு பலன்களை அனுபவித்தவர்கள், இப்போது தங்களின் சுயநலத்திற்காகவும், புதிய பலன்களைத் தேடியுமே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
இதையும் படிக்க: கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
பாலகங்கா படம் கிழிப்பு:
இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பேனரில், அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தவெக-வில் இணைந்த முன்னாள் வடசென்னை மாவட்டச் செயலாளர் பாலகங்காவின் படம் இடம்பெற்றிருந்தது. இதைக் கண்ட அதிமுக தொண்டர்கள் ஆத்திரமடைந்து, பேனரிலிருந்து பாலகங்காவின் படத்தை மட்டும் தனியாகக் கிழித்து எறிந்தனர். இதனால் கட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.