அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!
இந்த மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டத்தின் முதற்கட்டமாக, இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை, ஜுன் 13: நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தேர்தல் தோல்வி மற்றும் கட்சியில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக தனித்து 47 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை அதிமுகவின் வாக்குச் சதவீதம் மிகவும் சரிந்துள்ளது.
இதையும் படிக்க: கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..
நெருக்கடியான சூழ்நிலையில் ஆலோசனை:
அதேவேளையில், இத்தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள சூழலில், அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் தொடர்ந்து விலகி தவெக-வில் இணைந்து வருகின்றனர். இன்று கூட அதிமுகவின் முக்கிய நிர்வாகியான பாலகங்கா உள்ளிட்டோர் தவெக-வில் இணைய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த மிக நெருக்கடியான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையைத் துவங்கியுள்ளார்.
ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய இபிஎஸ்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேர்தல் தோல்வி குறித்து ஆராய புதிய வழிகளைத் திட்டமிட்டுள்ளார். கடந்த காலங்களில் கட்சி தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிமட்டக் கிளை நிர்வாகிகள் வரை நேரில் அழைத்து, தோல்விக்கான காரணங்களை நேரடியாகக் கேட்டறிவார். அதே பாணியை தற்போது எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்துள்ளார்.
புகார்களைத் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்:
கிளை, நகரம், பேரூராட்சி, ஒன்றியம், மாவட்டம் என அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களிடம் அவர் நேரடியாகப் பேசுகிறார். கட்சிக்குள்ளான உட்கட்சிப் பூசல்கள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து எந்தவிதத் தயக்கமும் இன்றி தன்னிடம் நேரடியாகப் புகார்களைத் தெரிவிக்கலாம் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டம்:
இந்த மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டத்தின் முதற்கட்டமாக, இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க: அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன ‘பாசிட்டிவ்’ வார்த்தை..
தொடர்ச்சியான கட்சித் தாவல்கள் மற்றும் தேர்தல் சரிவிலிருந்து அதிமுகவை மீட்டெடுக்க, உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த அதிரடி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.