கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..
பதவியில் இருக்கும் போது கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபடும் மூன்றாவது தமிழக முதலமைச்சர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் இக்கோவிலுக்குச் சென்று மிகத் தீவிரமாக வழிபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா, ஜூன் 13: தமிழக முதலமைச்சர் விஜய் தனது மூன்று நாள் டெல்லி பயணத்தை நிறைவு செய்த கையோடு, கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள உலகப் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். இதனிடையே, அங்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் கறுப்புக்கொடி காட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கறுப்புக்கொடி காட்ட முயன்றதன் பின்னணி குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு – வெள்ளி வேல் காணிக்கை
முன்னாள் முதல்வர்களின் ஆன்மீகப் பாதை:
முதல்வர் விஜய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதன் மூலம், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும் தற்போது கொல்லூர் நோக்கி திருப்பியுள்ளது. இதன் மூலம் பதவியில் இருக்கும் போது கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபடும் மூன்றாவது தமிழக முதலமைச்சர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் இக்கோவிலுக்குச் சென்று மிகத் தீவிரமாக வழிபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கோடசாத்ரி மலையின் அடிவாரத்தில், சௌபர்ணிகா நதிக்கரையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் ஒருங்கிணைந்த வடிவமாக மூகாம்பிகை தேவி இங்கு காட்சி அளிப்பதால், ஆன்மீக ரீதியாக இத்தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
போராட்டப் பின்னணி:
இதனிடையே, முதல்வர் விஜய்யின் கர்நாடகா சென்றிருந்தபோது, மேகேதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர்நாடகாவின் தீவிர கன்னட அமைப்பான ‘கன்னட ரக்ஷண வேதிகே’ (பிரவீன் ஷெட்டி பிரிவு) அமைப்பினர் இந்த கறுப்புக்கொடி போராட்டத்திற்குத் திட்டமிட்டிருந்தனர். உடுப்பி மாவட்டத்தின் உத்யாவர் பகுதியில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “காவேரி நம்மது”, “கன்னட விரோதி தமிழக முதலமைச்சருக்குத் திக்காரம்” போன்ற கோஷங்களை எழுப்பினர். அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம், உடுப்பி போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
கன்னட அமைப்பின் குற்றச்சாட்டு:
இப்போராட்டம் குறித்துப் பேசிய கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் பிரதிநிதிகள், “மேகேதாது அணைத் திட்டம் என்பது பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையைத் தீர்க்கவும், விவசாயிகளின் பாசனத்திற்காகவும், மின்சாரத் தயாரிப்பிற்காகவும் கொண்டு வரப்படும் மிகவும் அவசியமான திட்டமாகும். ஆனால், தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற இரண்டே நாட்களில், இந்த மேகேதாது திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சட்ட வல்லுநர்கள் குழுவை முதல்வர் விஜய் அவசர அவசரமாகத் தயார் செய்துள்ளார். அவருக்கு கர்நாடக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், இவ்வளவு அவசரமாக இதைச் செய்திருக்கத் தேவையில்லை. இதைக் கண்டித்தே நாங்கள் இன்று கறுப்புக்கொடி காட்டத் திரண்டோம்,” என்று கூறினர்.
இதையும் படிக்க : தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!
தொடரும் மேகேதாது சர்ச்சை:
மேலும் பேசிய அவர்கள், “முன்னாள் முதலமைச்சர்களைப் போலல்லாமல், புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயாவது இந்த விவகாரத்தில் நல்லதொரு தீர்வைக் காண வேண்டும். கர்நாடகாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் எவ்வித பாகுபாடுமின்றி வாழ்ந்து வருகின்றனர். எனவே, மேகேதாது திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காமல், இரு மாநிலங்களின் சுமுக உறவைக் கருதி தமிழக அரசு இதற்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும்,” என வலியுறுத்தினர்.
மேகேதாது விவகாரத்தில் கர்நாடகாவில் முதல்வர் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததும், அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டதும் இரு மாநில எல்லைப் பகுதிகளில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.