AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? எடப்பாடி பழனிசாமி காட்டம்..

Edappadi Palaniswami On Meketadu Dam: கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார் கருத்துகளுக்கு உரிய பதிலளிக்காமல், தமிழகத்தின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் ஜோசப் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? எடப்பாடி பழனிசாமி காட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 10 Nov 2026 18:38 PM IST

நவம்பர் 10, 2026: மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்ததாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் காவிரி உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதாக முதலமைச்சர் விஜய்யையும் அவர் விமர்சித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் சிவக்குமார் கருத்து


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்றும், இந்த அணை கட்டப்படுவதால் தமிழகத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், மேகதாது அணை திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் விஜய் ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். திட்ட அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பே முதன்மையானது என்றும் அவர் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் விளைவாக, உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியதுடன், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: குடும்பத் தகராறில் எல்லை மீறிய வெறி.. உறவினர் விரலை கடித்து துப்பிய நபர்.. அம்பாசமுத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மேலும், பன்மாநில நதிகள் தேசிய சொத்து என்றும், எந்த மாநிலமும் தனி உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்பதே உச்சநீதிமன்றத்தின் தெளிவான நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்ற கருத்துக்கு எதிர்ப்பு

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பிரதமருக்குக் கடிதங்கள் மூலமாகவும், நேரில் சந்தித்தும் தொடர்ந்து வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிடவில்லை என்றும், தற்போது மேகதாது அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை எனக் கூறி தமிழக மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: நீர்நிலைகளைச் சீரமைக்க தன்னார்வ அமைப்புகளுக்கு புதிய வசதி! ‘ஏரி’ இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

கர்நாடக முதலமைச்சரின் கருத்துகளுக்கு உரிய பதிலளிக்காமல், தமிழகத்தின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் ஜோசப் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Follow Us