தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு.. சிக்கிய ரூ.1.73 கோடி ரொக்கம், ஜிபே பரிவர்த்தனைகள்!!
DVAC Raids Across Tamil Nadu Municipal Offices: தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ₹13.78 லட்சம் ரொக்கம் மற்றும் ஜிபே மூலம் நடந்த ₹1.60 கோடி சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போலி ரசீது புத்தகங்கள் மற்றும் அதிகாரிகளின் ஜிபே கணக்குகள் மூலமாக நடந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தமிழகத்தில் அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் லஞ்ச ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, நகராட்சி நிர்வாகத் துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களை இலக்காகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடிச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!
43 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை:
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்த 43 நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையின் முடிவில், கணக்கில் வராத மொத்தம் ரூ.1.73 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் சந்தேகத்திற்குரிய ஜிபே (GPay) பணப்பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதில் கணக்கில் வராத நேரிடை ரொக்கப் பணமாக மட்டும் ரூ.13,78,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜிபே வழி லஞ்சம், அதிகபட்ச ரொக்கப் பறிமுதல்:
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், லஞ்சப் பணமும் ஜிபே செயலி மூலமாகப் பெறப்பட்டு வந்தது இச்சோதனையில் அம்பலமாகியுள்ளது. அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்களின் வங்கிச் கணக்குகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுமார் ரூ.1.60 கோடி வரை ஜிபே மூலம் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, தென்காசி மாவட்டம் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வங்கிச் கணக்கைச் சோதித்தபோது, ஜிபே மூலமாகவே ₹10 லட்சம் வரை லஞ்சப் பணம் பரிமாறப்பட்டது தெரியவந்தது. மேலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரனின் வாகன ஓட்டுநரிடமிருந்து மட்டும் கணக்கில் வராத ரூ.1,54,000 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!
போலி ரசீது புத்தகங்கள் கண்டெடுப்பு:
ரொக்கப் பணம் மற்றும் ஜிபே பரிவர்த்தனைகள் மட்டுமின்றி, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். அங்குத் தலா 100 ரசீதுகளைக் கொண்ட 59 போலி ரசீது புத்தகங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்பட்டன. அரசு நிதியைக் கையாடல் செய்யவும், வரிப் பணத்தை நேரடியாக அதிகாரிகளின் கணக்குகளுக்கு மாற்றவும் இத்தகைய போலி ரசீதுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.