வேலூரில் பகீர் சம்பவம்.. சிறுமியை கடத்தி குடித்தனம் நடத்திய 2 பெண்டாட்டிகாரர்.. போக்சோவில் கொக்கி போட்ட போலீஸ்!
Vellore Crime : வேலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளி மாநிலத்துக்கு கடத்தி சென்று 3 மாதங்கள் குடும்பம் நடத்திய 2 பெண்டாட்டிகாரரை காட்பாடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ( 31 வயது). லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், காட்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசுவது மற்றும் வெளியிடங்களுக்கு சுற்றி பார்க்க செல்வதுமாக இருந்து வந்தனர். பின்னர், ஒரு கட்டத்தில் பிரகாஷ் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு அந்த சிறுமி சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. அதன்படி, பிரகாஷ் அந்த 16 வயது சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால், சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், கண்டுபிடிக்க முடியாததால் இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆந்திராவில் இருந்த இருவரை மடக்கி பிடித்தனர்
அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், லாரி ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் சிறுமி இடையேயான பழக்கம் தெரியவந்தது. அதன் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பிரகாஷின் செல்போன் எண் மூலமாக ஆய்வு மேற்கொண்டதில், அவர் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்படி, ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த பிரகாஷ் மற்றும் அந்த சிறுமியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் படிக்க: மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!
ஏற்கெனவே திருமணமாகி 2 மனைவி – 5 குழந்தைகள்
தொடர்ந்து, அவர்கள் இருவரையும் காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், லாரி ஓட்டுனர் பிரகாஷ், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்றதும், பிரகாசுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று 2 மனைவிகளும், 5 குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
பின்னர், லாரி ஓட்டுநர் பிரகாஷ் மீது போக்சோ, கடத்தல், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 16 வயது சிறுமியை அந்தப் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் காட்பாடி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகம் தெரியும்.. அதென்ன தக்காளி வெற்றிக் கழகம்? பரபரப்பை ஏற்படுத்திய அரசு பேருந்து!