AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக ஆட்சியில் சரண்டர் செய்யப்பட்ட மருத்துவ இடங்கள் உதயநிதிக்கு தெரியுமா?”.. அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!

Minister Arunraj hits back udhayanidhi: கடந்த 2024-இல் 119 இடங்களும், 2025-இல் 145 இடங்களும் இவ்வாறு அகில இந்திய தொகுப்பிற்குச் சென்றதே வரலாறு ஆகும். எனவே, கடந்த ஆண்டு 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வது தடுக்கப்பட்டதாக உதயநிதி கூறுவது முற்றிலும் தவறானது.

“திமுக ஆட்சியில் சரண்டர் செய்யப்பட்ட மருத்துவ இடங்கள் உதயநிதிக்கு தெரியுமா?”.. அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!
அமைச்சர் அருண் ராஜ்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 Jun 2026 10:37 AM IST

சென்னை, ஜுன் 05: தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Specialty Medical Courses) இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் சரண்டர் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு மாநில உரிமைகளை நிலைநாட்ட சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது – முதல்வருக்கு உதயநிதி கடிதம்

உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு:

இதுகுறித்து நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் அலட்சியத்தால் அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உச்சநீதிமன்ற உத்தரவால் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்கத் தவறிவிட்டனர். இதனால் இதய நோய், புற்றுநோய், நரம்பியல் போன்ற உயர் சிகிச்சைகளுக்குப் பின்னடைவு ஏற்படும். எனவே முதலமைச்சர் விஜய் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தடுக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்:

உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்று மறுத்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், புள்ளிவிவரங்களுடன் பின்வரும் விளக்கங்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 422 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில், 219 இடங்கள் மாநிலக் கோட்டாவிலும் மீதமுள்ள இடங்கள் அகில இந்திய கோட்டாவிலும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக்காலங்களில் கலந்தாய்வு முடிந்த பிறகு, மாநிலக் கோட்டாவில் அரசு மருத்துவர்களால் நிரப்பப்படாமல் எஞ்சிய இடங்கள் அனைத்தும் அகில இந்திய கோட்டாவிற்குச் சரண்டர் செய்யப்பட்டது உதயநிதிக்குத் தெரியாதா என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி கூறுவது முற்றிலும் தவறானது:

கடந்த 2024-இல் 119 இடங்களும், 2025-இல் 145 இடங்களும் இவ்வாறு அகில இந்திய தொகுப்பிற்குச் சென்றதே வரலாறு ஆகும். எனவே, கடந்த ஆண்டு 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வது தடுக்கப்பட்டதாக உதயநிதி கூறுவது முற்றிலும் தவறானது. புதிய அரசின் நடவடிக்கை: இந்த ஆண்டு மாநிலக் கோட்டாவில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அவற்றைச் சரண்டர் செய்ய மறுத்து, உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை முன்வைத்தது. எனினும், மே 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அந்த 151 இடங்களைச் சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டது.

இதையும் படிக்க : “தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்!”.. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!!

அரசின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை:

உச்சநீதிமன்ற உத்தரவு வந்தபோதிலும், தமிழக அரசு மருத்துவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பாக நேற்று (ஜூன் 4, 2026) உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற முக்கியத் தகவலையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், மாநில உரிமை சார்ந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையிலும் தமிழக வெற்றிக்கழக அரசு எப்போதும் துரிதமாகவும் உறுதியுடனும் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us