டிஜிட்டல்மயமாகும் டாஸ்மாக்… நவம்பர் 1 முதல் வருகிறது புதிய நடைமுறை
TASMAC Digital Payment Rules : தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும், வரும் 2026 நவம்பர் 1 முதல், ஒரே பரிவர்த்தனையில் ரூ.1,000க்கு மேல் மதுபானங்கள் வாங்கினால், டிஜிட்டல் முறைகளில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 27 : தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும், வரும் 2026 நவம்பர் 1 முதல், ஒரே பரிவர்த்தனையில் ரூ.1,000க்கு மேல் மதுபானங்கள் வாங்கினால், யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு (Credit Card) போன்ற டிஜிட்டல் முறைகளில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. 2027 ஜனவரி 1 முதல், இந்த வரம்பு ரூ.500 ஆகக் குறைக்கப்படும் என்றும் குறைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல்மயமாகும் டாஸ்மாக்
அதன்படி வருகிற நவம்பர் 1, 2026 முதல் ரூ.1000க்கு மேல் மதுபானம் வாங்கினால் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் 2வது கட்டமாக ஜனவரி 1, 2026 முதல் ரூ.500 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புக்கு குறைவான தொகைக்கு வாங்குவோர், வழக்கம்போல ரொக்கமாகவும் பணம் செலுத்தலாம்.
இதையும் படிக்க : சிறைவாசம் அனுபவிக்கும் அன்பில் மகேஷ்.. முதல் வகுப்பில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும்.. அடேங்கப்பா லிஸ்ட் பெருசா போகுது!




இதுதொடர்பாக, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் நந்தகுமார் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாநிலம் முழுவதும் 4,048 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ரொக்கம், யுபிஐ, கார்டு எனப் பல வழிகளில் பணம் பெறப்பட்டாலும், விற்பனைத் தொகையின் பெரும்பகுதி இன்னும் ரொக்கமாகவே வசூலாவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம் செலுத்துவதால் என்ன சிக்கல்?
நாள்தோறும் வசூலாகும் பெருந்தொகையைக் கடையில் பாதுகாப்பாக வைத்திருப்பதில் பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ரொக்கத்தை வங்கியில் செலுத்துவதற்காக நாள்தோறும் பயணிக்க வேண்டியிருப்பதால், அவர்களின் பணிச்சுமையும் ஆபத்தும் அதிகரிக்கின்றன. ரொக்கப் பரிவர்த்தனையில் கள்ள நோட்டுகள், பணப் பற்றாக்குறை, கணக்கு வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எம்ஆர்பி-க்கு மேல் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றன. ஆனால், ரொக்கப் பரிவர்த்தனைக்குச் சான்று இல்லாததால், அவற்றைத் தடுப்பதும் விசாரிப்பதும் கடினமாக உள்ளது.
டிஜிட்டல் முறையில் பணம் பெறப்படும்போது, ஒவ்வொரு பரிவர்த்தனையின் தொகையும் நேரமும் பதிவாகிவிடும். இதனால், எம்ஆர்பி-க்கு மேல் கூடுதல் விலை வசூலிப்பது தடுக்கப்படும். விற்பனைத் தொகை நேரடியாகத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கடையில் ரொக்கம் வைத்திருப்பது, இரவு நேரத்தில் ரொக்கத்துடன் பயணிப்பது போன்ற ஆபத்துகள் குறைவதுடன், விற்பனையில் வெளிப்படைத்தன்மையும் பணியாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
இதன் முதல் கட்டமாக, கடந்த 2026 ஆகஸ்ட் 7 முதல் ஆன்லைன் மதுபான முன்பதிவு முறை நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் விரும்பிய மதுபானங்களையும் அருகிலுள்ள கடையையும் தேர்வு செய்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திவிட்டு, கடைக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது அனைத்துக் கடைகளிலும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையைப் படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தேனி சிறையில் இருந்து எஸ்-ஆன 17 கைதிகள்.. ட்ரோன் மூலம் தூக்கிய தனிப்படை.. காட்டுப்பகுதியில் மேலும் 8 கைதிகள் கைது!
பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட, செயல்படும் நிலையிலுள்ள பிஓஎஸ் (POS) இயந்திரம் ஒவ்வொரு கடையிலும் 2026 நவம்பர் 1-க்கு முன்பே இருப்பதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பழுதான இயந்திரங்களைத் தொழில்நுட்பப் பணியாளர்கள் மூலம் சரிசெய்ய வேண்டும் அல்லது மாற்று இயந்திரங்களைப் பெற வேண்டும். அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட இயந்திரம் மூலம் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற வேண்டும். விதிமுறைகளை மீறும் பணியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் புதிய நடைமுறை குறித்து, ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பும் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.