தமிழகத்தில் எஸ்.ஐ. காலிப்பணியிடங்கள் எவ்வளவு? அறிக்கை கேட்கும் டிஜிபி.. விரைவில் SI தேர்வு?
DGP Mahesh Kumar Aggarwal : தமிழக காவல் துறையில் எத்தனை உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற விவரத்தை டி.ஜி.பி. மகேஸ் குமார் அகர்வால் அறிக்கையாக கேட்டுள்ளார். இதனால், விரைவில் எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் காவல்துறையில் எத்தனை உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அறிக்கை கேட்டுள்ளார். தமிழகத்தில் 38 காவல் மாவட்டங்களும், சென்னை, மதுரை, திருச்சி கோயம்புத்தூர் உள்ளிட்ட 9 பெரு நகர காவல் ஆணையர் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது, தமிழக காவல்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. இதன் காரணமாக போலீசார் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பேணி காப்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக காவல்துறையில் எத்தனை உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று உடனடியாக கணக்கெடுத்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பெருநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
உதவி ஆய்வாளர்கள் குறித்த முழு விவரம்
இது தொடர்பாக, டிஜிபி வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்கள். தற்போது, பணியில் இருக்கும் உதவி ஆய்வாளர்களின் எண்ணிக்கை. காலி பணியிடங்கள் எண்ணிக்கை ஆகியவற்றை வரும் அக்டோபர் 5- ஆம் தேதிக்குள் ( திங்கள் கிழமை) டிஜிபி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதே போல, தற்போது காவல்துறையில் பணியில் இருக்கும் ஆண் மற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர்களில் ஜாதி வாரியான எண்ணிக்கை மற்றும் காலிப் பணியிடங்களில் ஜாதி ரீதியான எண்ணிக்கை ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.
மேலும் படிக்க: எட்டயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பாய்ந்த ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. 6 பேருக்கு தீவிர சிகிச்சை!




சிறப்பு படை சப்- இன்ஸ்பெக்டர் விவரம்
இது மட்டும் இன்றி சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப் படை, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களையும் சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையில் காலியாக உள்ள எஸ். ஐ. பணியிடங்களின் எண்ணிக்கையை டிஜிபி கேட்டுள்ள காரணத்தால், அது தொடர்பாக காவல் ஆணையர்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகம் தரப்பில் கணக்கெடுக்கப்படும்.
விரைவில் எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்பு
அதன் அடிப்படையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை டிஜிபி தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் காவல் உதவி ஆய்வாளர்கள் பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிக்கு செல்ல வேண்டும் என்று கனவோடு இருந்து வரும் இளைஞர்களுக்கு இது நற்செய்தியாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: கூகுள் பே-வில் லஞ்ச வேட்டை.. வசமாக சிக்கிய எஸ்.ஐ- காவலர்.. சென்னை கமிஷனர் சஸ்பெண்ட் ஆக்சன்!