கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கடலூர் மீனவர்கள் மாயம்.. களத்தில் குதித்த கடலோர காவல் படை!
Cuddalore Fishermen Disappeared: கடலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து கடலுக்கு மீன்கள் பிடிக்க சென்ற மீனவர்கள் திடீரென மாயமாகி உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து தருமாறு அந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் ஏராளமான மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி இருந்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகு ஆகியவற்றின் கடலுக்கு சென்று மீன்கள் பிடித்து வருகின்றனர். தற்போது, தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதன் காரணமாக விசைப்படகு மீனவர்கள் ஆள்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சி. புதுப்பேட்டை சண்முகா நகரை சேர்ந்த ரவி என்ற ரமேஷ் ( 28 வயது), இதே பகுதியை சேர்ந்த மனோகர் ( 27 வயது), புதுச்சேரி மாநிலம், அனாதை சித்திக் குலத்தை சேர்ந்த நாகவேல் ( 40 வயது) ஆகியோர் கடந்த ஜூன் 2- ஆம் தேதி பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் புதுப்பேட்டை இந்திராநகர் பகுதியை சேர்ந்த வீரவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.
கடலில் இருந்து கரை திரும்பாக மீனவர்கள்
அவர்கள் மறுநாள் ஜூன் 3- ஆம் தேதி கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தற்போது வரை கரை திரும்ப வில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் கடலில் மாயமான மீனவர்களை படகுகளில் தேடி சென்றனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராம மக்கள் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அன்னங்கோவில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த மீனவ துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் படிக்க: சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்.. பள்ளி மாணவனை மது குடிக்க வைத்து கழுத்தறுத்து கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட இருவருக்கு வலை!




கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டை
இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து கடலோர காவல் படை மூலமாக கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், கடலில் மாயமான மீனவர்களை ஹெலிகாப்டர் மூலமாக தேட வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் காணாமல் போன மீனவர்கள் கண்டறியப்படுவார்கள் என்று மின் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினர் கைது செய்தனரா
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதில், இலங்கை கடற்படையினர் அல்லது கடற்கொள்ளையர்கள் அவர்களை கடத்தி சென்றனரா. அல்லது கடலில் படகு ஏதேனும் விபத்தில் சிக்கி மாயமானார்களா என்பன உள்ளிட்ட கோணங்களிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: கேமராவால் சிக்கிய காக்கி.. ஓடும் ரயிலில் அநாகரீகம்.. ஆதாரத்தால் கைதான கோவை தலைமை காவலர்!