இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்.. பிசிசிஐ-யின் அதிரடி முடிவு!!
இந்த அணியில் மிகப்பெரிய ஆச்சரியமாக, பீகாரைச் சேர்ந்த 15 வயது இடதுகை பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1980-களின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர் தேர்வானதற்குப் பிறகு, இந்திய ஆண்கள் அணியில் இடம்பெறும் மிக இள வயது வீரர் இவரே ஆவார்.
2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, இந்திய டி20 கிரிக்கெட் அணியை இளமையாக்கும் நோக்கில் பிசிசிஐ (BCCI) தேர்வுக் குழு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் (மார்ச் 2026) நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையைத் தக்கவைக்க வழிவகுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், மோசமான ஃபார்ம் மற்றும் வயது மூப்பு காரணமாக அணியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : IPL 2026: முழு சம்பளத்தை மும்பை அணி தரவில்லை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய சாண்ட்னர்!
சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதன் பின்னணி
கடந்த மார்ச் (2026) மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை சாம்பியன் ஆக்கினாலும், அவரது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை. 9 இன்னிங்ஸ்களில் 242 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட்டும் 136.72 ஆகக் குறைந்து காணப்பட்டது. உலகக்கோப்பைத் தொடரைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யகுமார் 13 இன்னிங்ஸ்களில் வெறும் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 20.76 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 147.54 ஆகவும் சரிந்தது. இந்தத் தொடர் சரிவே தேர்வுக் குழுவை இந்த அதிரடி முடிவுக்குத் தள்ளியுள்ளது.
புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்
கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது, காயம் அடைந்த ஒரு வீரருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அப்போது உலகக்கோப்பைக்குத் தயாராகிக் கொண்டிருந்த முக்கிய வீரர்களுக்கே பிளேயிங் லெவனில் (Playing XI) முன்னுரிமை வழங்கப்பட்டதால், அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த 2023 டிசம்பருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த 31 வயதான ஸ்ரேயாஸ் ஐயருக்கு இப்போது கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர்களில் அவரது சிறந்த கேப்டன்சி இதற்குக் முக்கிய காரணமாகும். 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை சாம்பியன் ஆக்கினார். 2020 & 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஐபிஎல் 2025-ல் 604 ரன்களும், ஐபிஎல் 2026-ல் 498 ரன்களும் குவித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு:
இந்த அணியில் மிகப்பெரிய ஆச்சரியமாக, பீகாரைச் சேர்ந்த 15 வயது இடது கை பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1980-களின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர் தேர்வானதற்குப் பிறகு, இந்திய ஆண்கள் அணியில் இடம்பெறும் மிக இள வயது வீரர் இவரே ஆவார். நடப்பு ஐபிஎல் தொடரில் 237.30 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து அனைவரையும் மிரள வைத்ததால் இவருக்கு இந்த ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.
போட்டி அட்டவணை:
இந்திய அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
அயர்லாந்து தொடர்: ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெல்ஃபாஸ்ட்டில் 2 டி20 போட்டிகள்.
இங்கிலாந்து தொடர்: ஜூலை 1 முதல் 11 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்.
இதையும் படிக்க : Team India: காயத்தால் சிக்கலில் சிக்கிய கோலி.. ஆப்கானிஸ்தான் ODI தொடரில் இருந்து விலகல்?
இந்திய டி20 அணி விபரம்:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.