AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வடிவேலு பட பாணியில் நாடகம்.. வீட்டு வாசலில் விழுந்து பணம் பறித்த பெண்.. சிக்க வைத்த இளைஞர்கள்!!

கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் பின்தொடர்ந்து வீடியோ எடுத்துப் பிடித்துள்ளனர். தற்போது அந்தப் பெண் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து மக்களை ஏமாற்றும் திடுக்கிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது.

வடிவேலு பட பாணியில் நாடகம்.. வீட்டு வாசலில் விழுந்து பணம் பறித்த பெண்.. சிக்க வைத்த இளைஞர்கள்!!
வீட்டு வாசலில் விழுந்து பணம் பறித்த பெண்
Sekaran S
Sekaran S | Published: 03 Aug 2026 13:55 PM IST

கோவை, ஆகஸ்ட் 03: கோவையில் நடுரோட்டிலும், வீடுகளின் வாசலிலும் திடீரென வலிப்பு நோய் வந்தது போல நடித்து, மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொதுமக்களின் இரக்க உணர்ச்சியைப் பயன்படுத்தித் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி பாணியில் அமைந்த இந்த ஏமாற்று வேலையை அப்பகுதி இளைஞர்கள் தங்களது செல்போனில் ஆக்‌ஷன் வீடியோவாகப் பதிவு செய்து அம்பலப்படுத்திய சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மதுரை அருகே கோர விபத்து.. குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!

வீதி வீதியாகத் அரங்கேறிய வலிப்பு நாடகம்:

கோவை மாநகருக்கு உட்பட்ட சிவானந்தா காலனி, ரத்தினபுரி, லட்சுமிபுரம் மற்றும் விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மப் பெண் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அவர் திடீரென ஆள்நடமாட்டம் உள்ள வீடுகளின் வாசலிலும், பொதுச் சாலைகளிலும் துடிதுடித்து கீழே விழுந்துள்ளார். கடுமையான வலிப்பு நோய் தாக்கியது போலத் தனது உடலை நடுங்கச் செய்து, மூச்சு திணறித் தவிப்பது போல் தத்ரூபமாக நாடகமாடியுள்ளார்.

இதைக் கண்டு பதறிப்போன அப்பகுதி வீடுகளில் இருந்த ஆண்களும் பெண்களும், ஐயோ பாவம் என்று ஓடிவந்து அவருக்குத் தண்ணீர் தெளித்து, முதலுதவி சிகிச்சைகளை அளித்துள்ளனர். சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்புவது போல் நடித்து, “சொந்த ஊருக்குச் செல்லப் பணமில்லாமல் தவிக்கிறேன்” என்று கண்ணீர் வடித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய பொதுமக்கள், தங்களது சொந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்து அவரை ஊருக்குச் செல்லுமாறு வழியனுப்பி வைத்துள்ளனர்.

சந்தேகமும் ரகசியக் கண்காணிப்பும்:

பணத்தைப் பெற்றுக்கொண்டு நகர்ந்து சென்ற அந்தப் பெண்ணின் நடத்தை மற்றும் அசைவுகளில் அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்குத் திடீரெனச் சந்தேகம் எழுந்தது. உண்மையிலேயே பாதிக்கப்பட்டவரா அல்லது ஏதேனும் மோசடி செய்கிறாரா என்பதைக் கண்டறிய, அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் ரகசியமாகப் பின்தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்தனர்.

இளைஞர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்த தெருவிற்குச் சென்ற அந்தப் பெண், அங்கிருந்த மற்றொரு வீட்டின் வாசலிலும் அதேபோல திடீரென கீழே விழுந்து வலிப்பு வந்தது போல் மீண்டும் நடித்துப் பணம் பறிக்க முயன்றுள்ளார்.

தமிழ் திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியில் வருவதைப் போல, ஊர் ஊராகச் சென்று வலிப்பு நாடகமாடி பணத்தைப் பறிக்கும் ஒரு நெட்வொர்க் கும்பலின் வேலை இது என்பதை உணர்ந்த இளைஞர்கள், உடனடியாகத் தங்களது செல்போனை எடுத்து அந்தப் பெண்ணின் ஏமாற்று நாடகத்தைக் கையும் களவுமாக வீடியோ பதிவு செய்தனர்.

இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!

காவல்துறைக்கு கோரிக்கை:

தற்போது அந்தப் பெண் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து மக்களை ஏமாற்றும் திடுக்கிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது. மனிதாபிமான அடிப்படையிலும் இரக்க குணத்தோடும் உதவும் கோவை மக்களின் நல் எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் இதுபோன்ற மோசடிக் கும்பல்கள் மீது கோவை மாநகரக் காவல் துறை உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தீவிரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us