சொத்து விவரத்தை மறைத்தேனா? – உயர் நீதிமன்றத்தில் முதல்வர் தரப்பு வாதம்
Election Case Against CM Vijay : பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அசையும், அசையா சொத்துகள் தொடர்பான எந்த விவரத்தையும் மறைக்கவில்லை என முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
சென்னை, அக்டோபர் 6 : பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அசையும், அசையா சொத்துகள் தொடர்பான எந்த விவரத்தையும் மறைக்கவில்லை என முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் முதல்வர் தரப்பு வாதம்
நடந்து முடிந்த 226 சட்டப்பேரவைத் தேர்தலில், முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து, அத்தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையும் படிக்க : திருவண்ணாமலையில் பரபரப்பு.. ஒரே நேரத்தில் 134 துப்பாக்கிகள் அழிப்பு.. என்ன காரணம்!




இந்த நிலையில் இந்த வழக்குகளை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த விசாரணையின்போது, முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வேட்புமனுவில் வேட்பாளர்கள் தங்களுக்குச் சொந்தமான சொத்துகள், இருப்பிடங்கள், உரிமை தொடர்பான விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என விதிகள் கூறுவதாக தெரிவித்தார்.
அதன்படி தேர்தல் விதி 7(b)-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சுமார் ரூ.220 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார் என்றும் மொத்தமாகத் தன்னிடம் ரூ.630 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்
சொத்துகள் என்னென்ன, அவை எங்கே அமைந்துள்ளன என்பதைத் தெரிவித்தாலே போதுமானது என்றும், அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தை மதிப்பு ஏன் குறிப்பிடப்படவில்லை என்ற கேள்வியை எழுப்ப முடியாது என்றும் வழக்கறிஞர் கூறினார்.
முறைகேடு செய்யப்பட்டிருந்தாலோ, ஆவணங்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வேட்புமனுவை ஏற்கக் கூடாது எனக் கோர முடியும். இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பது முதல்வர் தரப்பின் நிலைப்பாடு. மேலும், முதல்வர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் தேர்தல் வழக்குத் தொடர்ந்தவர்கள் தங்கள் மனுக்களில் குறிப்பிடவில்லை என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிக்க : Tamil Nadu weather: நாளை இந்த 20 மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
இந்த நிலையில் அவரது தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வி. லட்சுமி நாராயணன், வழக்கின் விசாரணையை அக்டோபர் 7, 2026 அன்று ஒத்திவைத்தார். முதல்வர் விஜய்க்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்களின் வாதங்கள் நாளை நடைபெறுவதால் இந்த வழக்குகள் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் முடிந்த நிலையில் இந்த வழக்கு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.