‘அண்ணன் சீர்’ திட்டம்.. 8 கிராம் தங்க நாணயம் பெற தகுதிகள் என்னென்ன? அரசாணையில் எதிர்பாராத மாற்றங்கள்.. வெடித்தது சர்ச்சை!!
Annan Seer Scheme: தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி 'அண்ணன் சீர்' திட்டத்திற்கான ஆண்டு வருமான வரம்பை ரூ.5 லட்சமாக அமல்படுத்தாமல், ரூ.2.5 லட்சமாகக் குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியும் சர்ச்சையும் வெடித்துள்ளது.
சென்னை, அக்.06: தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளும், ஆட்சிக்கு வந்த பிறகு அவை செயல்படுத்தப்படும் விதமும் மக்கள் மத்தியில் எப்போதுமே உற்றுநோக்கப்படும் முக்கிய அம்சங்களாகும். குறிப்பாக, எளிய மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரம், நலன் சார்ந்த திருமண உதவித் திட்டங்களில் கொண்டுவரப்படும் நிபந்தனை மாற்றங்கள் பெரும் விவாதங்களை உருவாக்குடுகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த ‘அண்ணன் சீர்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அதில் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாகப் பயனாளிகளுக்கான ஆண்டு வருமான வரம்பை பாதியாகக் குறைத்துள்ள நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: திருமண பெண்களுக்கு குட் நியூஸ்.. அண்ணன் சீர் திட்டம்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்!
தேர்தல் வாக்குறுதியும் புதிய அரசாணையும்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்குத் திருமண நிதியுதவியாக ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப்புடவையும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில், இத்திட்டத்திற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.5 லட்சமாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குறுதி அளிக்கப்பட்ட வருமான வரம்பில் பாதியை அப்படியே குறைத்திருப்பது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
திட்டத்திற்கான தகுதிகளும் விண்ணப்பிக்கும் முறையும்:
தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு மட்டுமே இந்த 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப்புடவையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்படும் நாள் முதலே இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாகப் பெறப்படும் என்றும், விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வாழ்வாதாரம் இழக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்.. புதிய ரக வேஷ்டி- சேலைக்கு கூலி உயர்வு.. பெ. சண்முகம் வைத்த கவன ஈர்ப்பு கோரிக்கை!
தொடரும் அதிர்ச்சிகள் – மக்கள் மத்தியில் அதிருப்தி:
முன்னதாக, தவெக தனது வாக்குறுதியில் அறிவித்திருந்த ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்திலும் இதேபோன்று நிபந்தனைகள் சுருக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, பின்னர் அதன் எண்ணிக்கையை 3 ஆகக் குறைத்ததோடு, அதற்கும் ஆண்டு வருமான வரம்பை ரூ. 2.5 லட்சமாக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘அண்ணன் சீர்’ திட்டத்திலும் வருமான வரம்பு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சமாகக் குறைக்கப்பட்டிருப்பது, பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடுமையான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.