“யாரும் ஓடிவிட வேண்டாம் என்பதா?.. கையில் அருவா கம்போடு வரப் போகிறாரா?”.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!
Nainar Nagendran Slams TVK: முதலமைச்சர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளர் எனக் கூறுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல் சினிமா வசனங்களைப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் சாடியுள்ளார்.
சென்னை, செப்டம்பர், 05: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த விவாதங்களும், அவரது பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சுகளும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இச்சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முதலமைச்சர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வருவதற்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அரசியல் களத்தையும் சட்டமன்றத்தையும் சினிமா ஸ்டுடியோ போலக் கருதிச் சிலர் பேசி வருவதாகக் கடுமையாகச் சாடினார்.
இதையும் படிக்க: கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. சென்னை, திருச்சியில் 10 இடங்களில் தீவிர ஆய்வு!
மக்கள் பிரச்சினை பற்றிப் பேச வேண்டும்:
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று கூறுவது விந்தையிலும் விந்தையான செய்தியாக உள்ளது. ஊடகங்களின் கவனத்தையும் ரேட்டிங்கையும் ஈர்ப்பதற்காகவே இதுபோன்ற வேடிக்கையான கேள்விகளும் கருத்துகளும் உலா வருகின்றன” எனக் குறிப்பிட்டார். மேலும், “சட்டமன்றத்திற்கு விஜய் என்ன கையில அருவா கம்போடவா வரப் போகிறார்? அவர் ஒன்றும் கையில் வெட்டுக்குச்சியோட வரப்போவதில்லை. இது என்ன சினிமாவா அல்லது சினிமா ஸ்டுடியோவா? சட்டமன்றத்தில் யாரும் ஓடிவிட வேண்டாம் என்று சொல்வதற்கு அவர் என்ன பேசப் போகிறார்? ஏற்கனவே சட்டமன்றத்தில் அவர் எதையும் பேசுவதில்லை” என்று காரசாரமாக விமர்சித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கேள்வி:
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். “தமிழகத்தில் நடைபெற்றுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், சிறுமிகள் மீதான வன்கொடுமைகள், கோவையில் நடைபெற்ற படுகொலைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் குறித்துச் சட்டமன்றத்தில் பேசப் போகிறார்களா? தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டவாறு மக்களுக்குத் தேவையான ரூ.2500 வழங்கும் திட்டம் குறித்துப் பேச வேண்டும். அதை விடுத்துச் சட்டமன்றத்தில் சினிமா வசனங்களைப் பேசுவது மக்களுக்கு உகந்தது அல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: உணவுப்படி உயர்வு முதல் புதிய வாகனம் வரை.. நிறைவேற்றப்பட்ட உடனடி வாக்குறுதிகள்.. ஒத்திவைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்..
ஆட்சிச் செயல்பாடுகள் மீதான விமர்சனம்:
மாநிலத்தில் எழும் பல்வேறு மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், ஊடக வெளிச்சத்திற்காக மட்டுமே இத்தகைய கருத்து மோதல்கள் உருவாக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள தொய்வு, சட்டப்பேரவையின் நேரத்தை அரசியல் விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவது போன்ற போக்கினை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார். தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பாஜகவிற்கும் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரடி வார்த்தை மோதல்கள், வரவிருக்கும் அரசியல் நகர்வுகளில் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.