AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“இனி லாக்கப் மரணங்கள் நடக்கவே கூடாது!”.. ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

CM Vijay Law & Order Review Meeting: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் சட்டம் மற்றும் சிறைத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் லாக்கப் மரணங்கள் மற்றும் காவல் மரணங்களைத் தடுக்கக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உள்ளூர் நீதிமன்றங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

“இனி லாக்கப் மரணங்கள் நடக்கவே கூடாது!”.. ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Jul 2026 13:47 PM IST

சென்னை, ஜூலை 29: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், சிறைத்துறையின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நீதித்துறை சேவைகளை விரைவுபடுத்துவது தொடர்பான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சிறைத்துறை தலைமை இயக்குநர், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த முக்கிய உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க : பழனி நில மோசடி வழக்கில் திருப்பம்.. சிக்கிய முக்கியப் புள்ளிகள்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி!

“லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி!”:

இக்கூட்டத்தில் காவல்துறையினரின் விசாரணை முறைகள் மற்றும் சிறைச்சாலை பராமரிப்பு குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், காவல் நிலையங்களிலோ அல்லது சிறைகளிலோ ‘லாக்கப் மரணங்கள்’ இனிமேல் ஒருபோதும் நிகழக் கூடாது என்றும், அவ்வாறு அசம்பாவிதங்கள் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். விசாரணைக் கைதிகள் மீதான மனித உரிமை மீறல்களைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் அனைத்துக் காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் சிசிடிவி கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.

எளிய மக்களுக்கு விரைவு நீதி:

நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களைக் குறைப்பதற்காகக் கீழ்க்கண்ட முடிவுகள் விவாதிக்கப்பட்டன. ‘மக்கள் நீதிமன்றம்’ அமைப்பின் மாதிரியில், நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் சிறு சிறு வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர ‘உள்ளூர் நீதிமன்றங்களை’ நிறுவுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அரசு வழக்கறிஞர்கள் விரைவு நியமனம்: மாவட்ட அளவில் அரசு சார்பாக வழக்குகளை நடத்த வழக்கறிஞர்களை நியமிப்பதில் ஏற்படும் தேவையில்லாத காலதாமதங்களைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சட்ட விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற ஏழை எளிய மக்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்க, சிறப்புச் சட்ட ஆலோசகர்களை நியமிக்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பழமையான சிறைகள் மூடல்:

சிறைத்துறையின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை நவீனமயமாக்குவது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் போதிய பாதுகாப்பு, சுகாதார வசதிகள் மற்றும் பரப்பளவு இல்லாத பழமையான சிறைச்சாலைகளை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக நவீன வசதிகள் கொண்ட மாற்று இடங்களில் புதிய சிறை வளாகங்களைக் கட்டத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?

சிறைக் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதுடன், அவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளையும் மனநல ஆலோசனைகளையும் வழங்கி மறுவாழ்வு அளிப்பதற்கான வழிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டன. தமிழக அரசு சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், நீதியை எளிய மக்களிடம் விரைவாகக் கொண்டு சேர்ப்பதிலும் உறுதியாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் முதலமைச்சரின் இந்த ஆய்வுக் கூட்டம் அமைந்திருந்தது.

Follow Us